Sunday 27 January 2013

பாடகி எஸ்.ஜானகிபத்ம பூஷன் விருதை ஏற்க மறுத்துள்ளார்.


மூத்த திரைப்படப் பாடகி எஸ்.ஜானகி, இந்திய மத்திய அரசு இந்த ஆண்டு தனக்கு வழங்கியுள்ள பத்ம பூஷன் விருதை ஏற்க மறுத்துள்ளார்.
இந்த விருது தனக்கு மிகவும் தாமதமாக வந்துள்ளதாகவும், தென்னிந்தியர்களை விட வட இந்தியர்களுக்கே இந்த விருதுகளில் அதிக முன்னுரிமை வழங்கப்படுவதாலும் தான் இந்த விருதைப் புறக்கணிப்பதாக ஜானகி கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென்னிந்தியாவில் ஜானகியின் குரலை அறிந்திருக்காதவர்கள் இருக்கமாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு பல தலைமுறையைச் சேர்ந்தவர்களையும் கவர்ந்திழுத்த திரைப்படப் பாடகி எஸ் ஜானகி ஆவார். 1957ஆம் ஆண்டு தொடங்கி 55 வருடங்களாய் ஜானகி திரைப்படங்களில் பாடிவருகின்றார்.

தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் உட்பட்ட தென்னிந்திய மொழிகளில் பெரும்பான்மையாகவும் ஹிந்தி உட்பட வேறு பல மொழிகளிலுமாக பதினையாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் இவர் பாடியுள்ளார்.

குடியரசு தினத்துக்கு முன்பாக இவ்வாண்டின் 'பத்ம' விருதுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பத்ம பூஷன் விருது தனக்கு வழங்கப்படவிருப்பதை அறிந்த ஜானகி, இந்த விருதைத் தான் ஏற்க மறுப்பதாக அறிவித்திருக்கிறார்.

இதேவேளை நிபுணர் குழுவின் மூலமாக பல்வேறு நபர்களையும் முறையாகப் பரிசீலித்து அவர்களின் பரிந்துரை அடிப்படையிலேயே விருதுகள் வழங்கப்படுவதாக மத்திய அரசு இணை அமைச்சர் வி நாராயணசாமி

வட இந்திய தென்னிந்திய பாரபட்சமோ, முன்கூட்டியே வழங்குதல் தாமதமாக வழங்குதல் என்ற பேதமோ, அரசியல் தலையீடோ இவ்விஷயத்தில் இல்லை என்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் நாராயணசாமி குறிப்பிட்டார்.

அமைச்சர், சல்மான் குர்ஷித்தையும், டெசோ குழு, சந்திக்கிறது.


ஐ.நா சபையிடம் கையளிக்கப்பட்ட, "டெசோ' மாநாட்டுத் தீர்மானங்களை அடுத்த கட்டமாக ஐ.நா.வின் உறுப்பு நாடுகளிடம்  டெசோ அமைப்பு கையளிக்கவுள்ளதாகவும்,  இதற்காக அந்த அமைப்பின் உறுப்பினர்கள், டில்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு செல்வதாகவும் திமுக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை:-

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து, டெசோ மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை, இலங்கை அரசு செயல்படுத்த, ஐ.நா., சபை வலியுறுத்த வேண்டும் என, தீர்மான நகல்களை ஐ.நா., சபையிடம், கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தலைமையிலான இருவர் குழு அளித்தது.

அடுத்தகட்டமாக ஐ.நா, சபைக்கு, அதன் உறுப்பு நாடுகள் அழுத்தம் தர வேண்டும் என்பதற்காக, டில்லியில் உள்ள, 47 நாடுகளின் தூதரகங்களுக்கு சென்று, டெசோ தீர்மானங்களை அதன் உறுப்பினர்கள் அளிக்கவுள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான் குர்ஷித்தையும், டெசோ குழு, நாளை மற்றும் நாளை மறுநாள் சந்திக்கிறது.

இலங்கையில் புனரமைப்பு பணிகளைத் தீவிரப்படுத்தவும், இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் தூதர்களுடனான சந்திப்பின்போது வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Thursday 24 January 2013

விஸ்வரூபம்பொங்கி எழுந்த இஸ்லாமியர்கள்,

ஒரு படத்தின் திரைக்கதையில் திடுக்கிடும் திருப்பங்கள் வரலாம்.
ஆனால் அந்த படத்தின் வெளியீட்டு விஷயத்திலேயே திடுக்கிடும் திருப்பங்கள் வந்தால் என்னதான் செய்வார் கமல்? விஸ்வரூபம் படத்தை துவங்கிய நாளில் இருந்து ரிலீஸ் செய்யும் நாள் வரைக்கும் அவர் சந்தித்த பிரச்சனைகள் அத்தனையும் சத்திய சோதனையையும் மிஞ்சுகிற அளவுக்கு இருக்கிறது.

ஒவ்வொரு முறை கமல் படம் ஆரம்பிக்கும்போதும் அப்படத்தின் கதையை யூகித்து தனியாக ஒரு கதையை கட்ட ஆரம்பிப்பார்கள் சிலர். மருதநாயகம், விருமாண்டி, ஹேராம் என்று இவர்கள் சொன்ன கதையை தனியாக எடுத்தால் அது பல வெள்ளிவிழாக்களை கண்டிருக்கும். இந்த முறையும் அப்படிதான் ஆரம்பித்தது இந்த நாடகம். ஒவ்வொரு முறையும் அவற்றையெல்லாம் முறியடித்து வெளியே வரும் கமல், இந்த முறை கால் வைத்தது கண்ணி வெடியில் என்றுதான் எண்ண தோன்றுகிறது.

தனக்கு தமிழ்சினிமாவிலும் மற்ற மொழிகளிலும் என்ன வியாபாரம் இருக்கிறது என்பதை நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கும் கமல், 100 கோடியில் படம் எடுக்க வந்ததே முதல் தவறு. முதலில் இந்த படத்தை தயாரிக்க முன் வந்த பிவிபி நிறுவனத்தினர், பிறகு நைசாக கழன்று கொள்ள, வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டிய நிலைமை வந்தது கமலுக்கு. தன் பணத்தை முதலீடு செய்து மீதி படத்தை எடுத்து முடித்தார் அவர். இப்போது விஸ்வரூபத்தில் போடப்பட்ட இருவர் பணத்தையும் சேதாரமில்லாமல் எடுக்க வேண்டும். அதற்காக, டிடிஎச் என்ற புதிய வழியை திறக்க முயன்ற போதுதான் இதுவரை வராதளவுக்கு வந்து சேர்ந்தது பிரச்சனை. படத்தை வெளியிட விட மாட்டோம் என்று தியேட்டர் அதிபர்கள் சங்கமும் விநியோகஸ்தர்கள் சங்கமும் ஒன்று சேர, விஸ்வரூபம் வெளியீட்டை பல முறை தள்ளி வைக்க நேர்ந்தது. இந்த நேரத்தில் முஸ்லீம் அமைப்புகளும் இது எங்கள் இனத்தை காயப்படுத்துகிற படம் என்ற குற்றச்சாட்டுடன் போராட்டத்தில் இறங்கியது.


ஒவ்வொன்றாக சமாளித்து மறுபடியும் ஒரு ரிலீஸ் தேதியை அறிவித்து தைரியமாக இப்படத்தின் பிரிமியர் ஷோவுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு சென்றிருந்த கமலுக்கு, பொழுது அவ்வளவு நல்லதாக விடியவில்லை. பிடிவாதமாக நின்ற முஸ்லீம் அமைப்புகளுக்கு படத்தை திரையிட்டு காண்பித்துவிட்டார். பொங்கி எழுந்த இஸ்லாமியர்கள், ஆங்காங்கே வசனங்களை நீக்கவோ, காட்சிகளை நீக்கவோ கூட வற்புறுத்தவில்லை. படத்தையே தடை செய் என்ற தமிழக அரசின் கதவை தட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

25 ந் தேதி படம் வெளியாகிற சமயத்தில் 23 ந் தேதி மாலை தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு உத்தரவை அனுப்பியது. விஸ்வரூபம் படத்தை வெளியிட பதினைந்து நாள் இடைக்கால தடை என்பதுதான் அந்த செய்தி. கலெக்டர்கள் மூலமாக விஸ்வரூபம் திரையிடப்படவிருந்த தியேட்டர்களுக்கும் செய்தி போனது. அதற்கு முன்பாகவே மீடியா, இந்த செய்தியை கொளுத்திப்போட நாடெங்கிலும் வரலாறு காணாத பரபரப்பு.

அரசு தரப்பிலிருந்து யாருமே திரைப்படத்தை பார்க்காத பட்சத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று காரணம் சொல்லி ஒரு படத்திற்கு தடை விதிப்பது அரசுக்கு அழகா என்று கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதுதானே அரசின் கடமை? மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துகிற வேலையை அரசு செய்யலாமா என்பதுதான் பலரது கேள்வி.

விஸ்வரூபத்திற்கு பிரச்சனை வரும் என்பதை முன்பே அறிந்து வைத்திருந்த கமல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சில வாரங்களுக்கு முன்பு சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று கமல் காரணம் சொன்னாலும், தன் படம் தொடர்பாகதான் முதல்வரை சந்தித்தார் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள் கோடம்பாக்கத்தில்.

டிடிஎச் விவகாரத்தில் வளைந்து கொடுக்காமலிருந்த கமல், படம் ஓடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என தலைமை செயலாளரிடம் மனு கொடுத்தபோது, ஒரு சினிமாவுக்காக தமிழக காவல் துறையை பயன்படுத்த முடியாது என்று கை விரிக்கப்பட்டதாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. வேறு வழியில்லாமல்தான் தியேட்டர்காரர்களிடம் அடிபணிந்தார் கமல் என்றும் கூறப்பட்டது.

ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்திவிட்ட இந்த நேரத்தில்தான் இப்படியொரு சிக்கல். முதல்வரை சந்தித்துவிட்டு திரும்பிய கமல் அடுத்த சில வாரங்களுக்குள்ளேயே முன்னாள் முதல்வர் கருணாநிதியும், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கலந்து கொண்ட ஒரு விழாவில் கலந்து கொண்டார். சிக்கலான ஒரு படத்தை கையில் வைத்துக் கொண்டு ஏன் தேவையில்லாத கூட்டங்களுக்கு அவர் போக வேண்டும் என்று அப்போதே யூகித்தார்கள் திரையுலகத்தினர் சிலர். அதன் பலனைதான் இப்போது கமல் அனுபவிக்கிறார் என்றும் கூறுகிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத சில சினிமாவுலக முக்கியஸ்தர்கள்.

அமெரிக்காவிருக்கும் கமல் அங்கிருந்து ஏதேனும் அறிக்கை அனுப்பலாம். அல்லது நேரடியாக சென்னைக்கு வந்திறங்கலாம். கமல் தரப்பிலிருந்து சொல்லப்படும் பதில் ஒன்றுதான் இன்றைய தேதிக்கு அதிமுக்கியமான வார்த்தைகளாக இருக்கும்.

Tuesday 22 January 2013

'எமது பயணம் இன்னமும் முடியவில்லை' : பதவியேற்பில் ஒபாமா


பாரக் ஒபாமா நேற்று வாஷிங்டனில் பொதுமக்கள் முன்னிலையில்  இரண்டாவது முறையாக  அமெரிக்க அதிபராக உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார்.
சுமார் 600, 000க்கு மேற்பட்ட பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு அவரது உரையை கேட்டனர். அவர்கள் முன்னிலையில் பேசிய ஒபாமா, உலக பிரச்சினைகளில் கவனம் செலுத்துவுவதை விடுத்து, உள்நாட்டின் அரசியல், வர்த்தக, சமூக விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என மறைமுகமாக தெரிவித்தார்.

எனினும் ஏனைய நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு பிரச்சினைகளை களைய முற்பட வேண்டும் எனவும்,  அமெரிக்கா இதுவரை சந்தித்த அச்சுறுத்தல்களுக்காக அல்ல. சந்தேகங்கள், பயங்கள் என்பவற்றை நிரந்தரமாக அகற்றுவதற்கு இம்முறையே உதவும் என்றார்.

எமது பயணம் இன்னமும் முடியவில்லை. அமெரிக்காவில் இதுநாள் வரை பல்வேறு நெருக்கடி நிலைகள் தோன்றி எம்மை சீண்டிப்பார்த்தன. எமக்கிருந்த தீர்வுகளை திருடிக்கொண்டன. எனினும்  இப்போது அமெரிக்காவின் எதிர்காலம் எல்லைகளற்று விரிந்துள்ளது. தசாப்தகாலமாக தொடர்ந்த அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துள்ளது. வர்த்தக ரீதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை சரியாக தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.  அமெரிக்காவில் குடியேறுபவர்கள், இந்நாடு வாய்ப்புக்களை வழங்கும் நாடு என உணர வேண்டும். இளம் மாணவர்கள், பொறியியலாளர்கள்  வெளிநாடுகளுக்கு செல்லாது எமது நாட்டிலேயே பணிபுரிய வேண்டும். அமெரிக்காவின் கடன் மற்றும் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மக்கள் ஒரு கடுமையான தெரிவுகளை பின்பற்ற வேண்டும்.
எமது பிள்ளைகள், பாதுகாப்பாக தெருக்களில் நடந்து செல்ல கூடிய நிலை தோண்ற வேண்டும். உயிர் அச்சுறுத்தல்களிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.

அவர் பதவியேற்கும் போது, அமெரிக்க முன்னாள் மாபெரும் அரசியல் தலைவர்களான மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும்  ஆபிரஹாம் லின்கன் ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட அதே பைபிளைத்தொட்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அதே போன்று, துணை அதிபராக ஜோ பிடேனும் பதவியேற்றுக்கொண்டார்.

முன்னதாக நேற்று வெள்ளை மாளிகையிலும் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.  ஒபாமா முதன்முறையாக 2008 இல் அதிபராக பதவியேற்ற போது 1.8 மில்லியன் மக்கள், வெள்ளை மாளிகை முன்னிலையில் திரண்டிருந்தனர். எனினும் இம்முறை 700,000 மக்கள் மாத்திரமே திரண்டிருந்தனர். 

Tuesday 15 January 2013

தங்கத்தில் முதலீடு செய்வது குறையும் என்றும் தகவல்


நடப்பாண்டில் பங்கு சந்தை ஏறுமுகத்துடன் எழுச்சியில் உள்ளது என்றும், இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது குறையும் என்றும் தகவல் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2008 ஆம்  ஆண்டு முதல் சர்வதேச நாடுகள்,  நிதி நெருக்கடி, பொருளாதார மந்த நிலை என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இதன் தாக்கத்தால் இந்திய பங்கு சந்தை தொடர்ந்து சரிவையே சந்தித்து வந்தது. குறிப்பாக 2011 ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் பங்குசந்தையில் முதலீடு குறைந்து காணப்பட்டது.

எனவே  அந்த காலக் கட்டங்களில் தங்கத்தின்  மீது மக்களின் முதலீடு அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டே போனது. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் அதிக லாபத்தையும் பெற்று  வந்தனர்.

இந்த நிலை, கடந்த ஆண்டு முதல் மாறத் தொடங்கியுள்ளது என்று பொருளாதார நிபுணர் ராமசுப்பு கூறுகிறார். பொருளாதார மந்த நிலையில் இருந்து சர்வதேச நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதுதான் இதற்கு காரணம் என அவர் சொல்கிறார்.

சர்வதேச நாடுகள் பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. இந்தியாவும் பொருளாதார சரிவில் இருந்து மீளத் துவங்கியுள்ளது. இதனிடையே மத்திய அரசும் பல நிதி சீர்திருத்தங்களை செய்துள்ளது. இந்த நடவடிக்கை அந்நிய முதலீட்டார்களை நம்பிக்கை படுத்தியுள்ளது.

இதன் விளைவாக அந்நிய நிதி நிறுவனங்கள்,  தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக, பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு பங்கு சந்தையில் அதிகரித்துள்ளது. இதனால்தான் வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் குறையும், அதோடு ஏற்ற இறக்கங்களுடனும் காணப்படும்.

பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு,  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக இருக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை உயர வாய்ப்பில்லை என்று சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவிப்பதாகவும் பங்கு சந்தை நிபுணர் ராமசுப்பு தெரிவிக்கிறார்.

Monday 14 January 2013

தமிழர்களின் அதி முக்கியமான, தனித்துவமான திருநாளான தைப்பொங்கல்


தமிழர்களின் அதி முக்கியமான, தனித்துவமான திருநாளான தைப்பொங்கல் இன்று (திங்கட்கிழமை) உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது.
உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் (சூரியன், மழை) மற்ற உயிர்களுக்கும் (கால் நடை) நன்றி சொல்லும் ஒரு நன்றியறிதலான விழாவாக கொண்டாடப்படும் இத்தைப்பொங்கல் விழா சமயங்கள் கடந்து பொதுவாக அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது.

அறுவடை காலத்தில் நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடும் வழக்கம் தமிழில் சங்ககாலத்திலிருந்து அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. தமது அறுவடையின் முதற்பயனை கதிரவனுக்கு படைத்து பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வது என்பதே தமிழன் பண்பாடு என்பது இவ்விழாவின் மூலம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மூன்று தினங்கள் கொண்டாடும் விழாவாக மாறியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் (நேற்று) மார்கழி கடைசி நாள் என்பதால் அந்நாளில் பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கமாகும். இதனை போகி பண்டியைகாக கொண்டாடுவார்கள். நாளை (செவ்வாய்க் கிழமை) மாட்டுப்பொங்கலும், நான்காம் நாள் காணும் பொங்கல் (உறவினர்களை சந்தித்து அன்பையும், உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொள்ளல்) நடைபெறுகிறது.

அகமதாபாத்தில் சர்வதேச காற்றாடி திருவிழாவைத் துவக்கி வைத்த நரேந்திர மோடி,


குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் சர்வதேச காற்றாடி திருவிழாவைத் துவக்கி வைத்த நரேந்திர மோடி,
காற்றாடித் திருவிழா குஜராத்தில் பல ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய விழாவாகும். இந்த விழாவில் மக்கள் பட்டங்களைப் பறக்கவிட்டு மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இப்படி காற்றாடி விடும் திருவிழாவை, சர்வதேச திருவிழாவாக கொண்டாட ஆரமிபித்து 24 ஆண்டுகள் ஓடிவிட்டனவாம். இந்த ஆண்டு 25 வது சர்வதேச காற்றாடித் திருவிழா கொண்டாட்டப் பட்டு வருகிறது. இந்த காற்றாடித் திருவிழா, ஒரு வாரம் வரை நடக்கும் என்றும் தெரிகிறது.

25 வது சர்வதேச காற்றாடித் திருவிழாவை குஜராத்தில் உள்ள  அகமதாபாத்தில் சபர்மதி நதிக்கரையில் நேற்று துவக்கி  வைத்துப் பேசினார் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி. அப்போது, குஜராத்தில் பல ஆண்டுகளாக இந்த காற்றாடி திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இதை ஒரு சம்பிரதாய விழாவாக மட்டுமே  நடத்தி வந்தார்கள்.

இந்த திருவிழாவுக்கு சர்வதேச அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது நான்தான். அதாவது இந்த காற்றாடி விடும் திருவிழாவை பிரபலப் படுத்தி உலகெங்கும் உள்ள சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து உள்ளேன். காற்றாடியைக்  காட்டி உலகையே ஈர்க்க முடியும் என்பதை நிரூபித்துள்ளேன்.

இந்த ஆண்டு காற்றாடித் திருவிழாவை சிறு நகரங்களிலும் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் குஜராத்தில் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும். இதனால் குஜராத் சுற்றுலாத்துறை சராசரியான 7 சதவிகிதத்தை விட, 16 சதவிகித வளர்ச்சியை குஜராத் சுற்றுலாத்துறை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. குஜராத்தில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் குஜராத் முழுவதும் இருக்கும் பரம ஏழைகள் கூட பலன் அடைவார்கள் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்


முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியீட்ட பொங்கல் வாழ்த்துச் செய்தியில் :

உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜாதி வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்தோடு பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதமாக கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளைபொருள்களை வைத்து புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கலோ பொங்கல் என்று இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை பொங்கல் ஆகும்.

வள்ளுவர் குறளுக்கு ஏற்ப உலகில் மக்கள் பல தொழில்கள் செய்து வந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது. இல்லங்கள்தோறும் பொங்கட்டும் பொங்கல்! இதயங்கள்தோறும் தங்கட்டும் இன்பங்கள்!' என மனமார வாழ்த்துவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.