Friday 16 November 2012

9ம் வகுப்புப் பாடத்தில் நாடார்கள் பற்றிய தவறான கருத்து : உடனே நீக்கக்கோரி பிரதமருக்கு கடிதம்


நாடார்கள் குறித்து அவதூறாக சிபிஎஸ்இ-9ம் வகுப்புப் பாடத்தில் கூறப்பட்டுள்ளதை உடனே நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், தமிழகத்தின் ஒரு பிரிவினரான நாடார்களை இழிவு படுத்தும் விதத்தில் பாடம் இடம்பெற்றிருப்பதை உங்கள் கவனத்துக் கொண்டு வருகிறேன். இந்தப் பாடத்தில், சாதிய ரீதியில் இவை அணுகப் பட்டிருக்கின்றன. சாதிப் பிரச்னையும் உடுப்பு மாற்றமும் என்ற பாடத்தில், தென்னகத்தில் நடத்திய தோள் சீலைப் போராட்டம் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுத் தொடர்புடைய ஒரு பகுதி மக்களை இவ்வாறு சித்திரிப்பது நவீன சமுதாயத்துக்கு உகந்ததல்ல. எனவே, இந்தப் பாடத்தை புத்தகத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் முதல்வர் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நெல்லை அருகே பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதிக் கொண்ட விபத்தில் சாத்தூரை சேர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் பலியானார்கள்

நெல்லை,நவ.17 - நெல்லை அருகே பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதிக் கொண்ட விபத்தில் சாத்தூரை சேர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்த சிவா (29), தங்கசாமி (17), மாரிசாமி (19), சங்கரநாராயணன் (22), சக்திகணபதி (23), மணிகண்டன் (29), மருதுபாண்டி (24), காளிராஜ் (26), சபரி (21), ராஜ்குமார் (28) ஆகியோர் சாத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் அனைவரும் கேளர மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேனில் சுற்றுலா சென்றனர். வேனை அதே ஊரைச் சேர்ந்த சந்திரகருப்பசாமி (45) என்பவர் ஓட்டி வந்தார். இவர்கள் கேரளாவில் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு நேற்று முன்தினம் குமரி மாவட்டத்திற்கு வந்தனர். அங்கு திற்பரப்பு, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்தனர். பின்பு நள்ளிரவு அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டு வந்தனர். இவர்களது வேன் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் நெல்லையை அடுத்துள்ள கங்கைகொண்டான் ராஜாபுதுக்குடியிருப்பு பகுதியில் வந்தபோது திடீரென பழுதானது. இதனைத்தொடர்ந்து வேனை டிரைவர் ரோட்டில் ஓரமாக நிறுத்தி பழுதானதை சரிசெய்து கொண்டிருந்தார். அதிகாலை நேரம் என்பதால் வேனில் வந்தவர்கள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நாமக்கல்லில் இருந்து நெல்லைக்கு முட்டை ஏற்றி வந்த லாரி நெல்லையில் முட்டைகளை இறக்கிவிட்டு மீண்டும் நாமக்கல் நோக்கி சென்ற போது முன்னால் பழுதாகி நின்ற வேன்  மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் ரோட்டோரம் இருந்த பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் சிவா, சபரி, ராஜ்குமார் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்கள். மேலும் வேன் டிரைவர் சந்திரகருப்பசாமி, காளிராஜ், மருதபாண்டி, சக்திகணபதி, மாரிசாமி,  தங்கசாமி ஆகியோர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈ்டுபட்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.