Saturday 25 August 2012

கடுமையானமழைக்கு20 பேர் மரணமடைந்தும் உள்ளனர்.

AddThis Social Bookmark Button

நேற்று வியாழக்கிழமை பாகிஸ்தானிலும் இந்தியாவின் வடக்கு ராஜஸ்தான் மாநிலத்திலும் பெய்த கடுமையான மொன்சூன் மழையால் கடும் வெள்ளப் பெருக்குஏற்பட்டதுடன் மண் சரிவுகளும் நிகழ்ந்துள்ளன.
இதனால் பாகிஸ்தானில் மட்டும் உத்தியோகபூர்வமான தகவலாக 21 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமை அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வமைப்பு மேலும் தெரிவிக்கையில் காஷ்மீர் பகுதியிலுள்ள முஷ்ஷாஃபரபாட் நகரில் மிகப் பெரிய மண்சரிவு ஒன்று நிகழ்ந்திருப்பதாகவும் இதில் பல பொது மக்கள் சிக்கியிருப்பதாகவும் இவர்களை மீட்பதற்கு மீட்புப் படையினர் கடுமையாகப் போராடி வருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்தியாவின் பஞ்சாப், கிபெர் பக்துங்க்வா எனும் பழங்குடியினர் வாழும் பகுதி மற்றும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதி என்பவற்றையே வெள்ளம் தாக்கியுள்ளது. இதில் நூற்றுக் கணக்கான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மேலும் முக்கியமான சாலைகள் சில முடக்கப்பட்டும் கிட்டத்தட்ட 390 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவின் ராஜஸ்தானில் 4 நாட்களாகக் கடுமையாகப் பெய்து வந்த மழை காரணமாக நூற்றுக் கணக்கானோர் வீடுகளை இழந்திருப்பதுடன் 20 பேர் மரணமடைந்தும் உள்ளனர்.  இதில் 10 பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

Wednesday 15 August 2012

11 சதவீதம் வளர்ச்சியை பெறுவதே எனது லட்சியம்முதல்வர் ஜெயலலிதா

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இன்று காலை அவர் சென்னை ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றுகையிலேயே அவ்வாறு குறிப்பிட்டார். முதல்வர் கொடியேற்றி வைத்ததைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.
அதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் பின் உரையாற்றுகையில், இன்றைய சுதந்திர நன்நாளில், சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களை வணங்குகிறேன். நாட்டின் 66வது சுதந்திர தினத்தில் 12வது முறையாக சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவதுடன் கூடுதலாக 11 சதவீதம் வளர்ச்சியை பெறுவதே எனது லட்சியம் எனக் குறிப்பிட்டார்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதத்தில் தமிழகத்தின் வளர்ச்சி 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும். அதற்காகவே 2023 தொலைநோக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். மேலும் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அரசு செயல்பட்டு வருகிறது, சுதந்திரத்துக்காக அடுத்தவரின் சுதந்திரத்தைப் பறிப்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Thursday 9 August 2012

சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு விழாமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்குஅழைப்பு


சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் கட்டப்பட்டு 2012 ஆகஸ்ட் 15-ந் தேதியுடன் 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி 150வது ஆண்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இக்பால் நேற்று மதியம் போயஸ் கார்டனில் உள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்ததுடன், சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு நேரில் அழைப்பு விடுத்தார்

Wednesday 8 August 2012

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மீண்டும் ஹமீத் அன்சாரி


குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மீண்டும் ஹமீத் அன்சாரி வெற்றி பெற்றிருக்கிறார்.
இதன் மூலம் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் போல, தொடர்ந்து  இரண்டாவது முறையும் வெற்றி பெற்ற பெருமை பெறுகிறார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பாக குடியரசுத் துணைத் தலைவருக்குப் போட்டியிட்ட தற்போதைய குடியரசுத் துணை தலைவர் அமீத் அன்சாரி, எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கை தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறார். பதிவான 790 வாக்குகளில் 490 வாக்குகள் அமீத் அன்சாரிக்கும், 238 வாக்குகள் ஜஸ்வந்த் சிங்குக்கும் விழுந்திருக்கிறது. இதில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகள்.
     
இதனால் அமீத் அன்சாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. எதிர்வரும் 11ம் திகதி அமீத் அன்சாரி பதவி ஏற்றுக் கொள்ளப்போவதாகவும் டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன. 1937 இல் பிறந்த அமீத் அன்சாரி 2 முறை டாக்டர் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய வெளியுறவு பணியாளராக பலநாடுகளிலும் சிறப்பாக செயலாற்றியவர் அமீத் அன்சாரி என்பதும், 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற துணைக் குடியரசுத்  தலைவர் தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட நஜ்மா ஹெப்துல்லாவை தோற்கடித்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

Saturday 4 August 2012

புனித பயணம் செல்வோருக்கு மானியம்: ஜெயலலிதா உத்தரவு


முதல் அமைச்சர் ஜெயலலிதா புனித பயணம் செல்லும் இந்துக்கள் மற்றும் கிறிஸ்த பெருமக்களுக்கு மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதன் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:"ஜாதி மதங்கள் பாரோம்'' என்ற பாரதியின் கூற்றுப்படி, முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களையும் சமமாகக் கருதி, அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வகை செய்யும் வகையிலும், எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையிலும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கிறிஸ்துவ பெருமக்கள் ஜெருசலேம் புனித யாத்திரை மேற்கொள்வதற்கும், இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளவும், அரசு சார்பில் உதவி செய்யப் படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் மக்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதி அளிக்கப்பட்டது.

அந்த தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், கிறிஸ்துவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வருவதற்கு, முதற்கட்டமாக 500  கிறிஸ்துவர்கள் சென்றுவர அரசு நிதி உதவி அளிக்கும் திட்டத்தினை செயல்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள் ளார்.

இதேபோன்று, சீனாவில் உள்ள  மானசரோவர் மற்றும் 108  வைணவத் திருத்தலங்களில் ஒன்றான நேபாள நாட்டிலுள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் இந்துக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், மானசரோவர் புனித யாத்திரைக்கு செல்ல இந்திய வெளியுறவுத் துறையால் தெரிவு செய்யப்படும் தமிழ் நாட்டைச் சார்ந்த 250 இந்துக்களுக்கும், முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளும் 250 இந்துக்களுக்கும் ஆக மொத்தம் 500 பேருக்கு ஆண்டு தோறும் அரசு மானியம் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த திட்டத்திற்காக இந்த ஆண்டு அதாவது 2012-13 ஆம் ஆண்டில் மானசரோவர் புனித பயணத்திற்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் சென்றுவர ஒரு நபருக்கு ஆகும் மொத்த உத்தேச செலவான 1 லட்சம் ரூபா யில் 40,000 ரூபாய் வீதம் 250 நபர்களுக்கென 1 கோடி ரூபாயும், முக்திநாத் புனித பயணத்திற்கு சென்னையிலிருந்து ரயில் மூலம் சென்று வர ஒரு நபருக்கு ஆகும் மொத்த உத்தேச செலவான 25,000 ரூபாயில் 10,000 ரூபாய் வீதம் 250 யாத்ரிகர்களுக்கென 25 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த யாத்திரைக்கான அரசு மானியம் பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் இந்து சமய அறநிலையத்துறையால் நாளிதழ்கள் மூலம் விளம்பரம் செய்யப்படும்.  வரப் பெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான பயனாளிகளை விதிகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யும் பணியை இந்துசமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.

அரசின் இந்த நடவடிக்கைகள், மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகிய புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை செல்ல விரும்பும் இந்துக்களின் கனவு, குறிப்பாக பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளவர்களின் கனவு நனவாகிட பெரிதும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Thursday 2 August 2012

தனது கட்சியின் முதுகெலும்பாக இளைஞர்கள்அன்னா ஹசாரே,


மக்களின் நலனுக்காக மாற்று அரசியல் உருவாக்கப் போவதாக அறிவித்துள்ள அன்னா ஹசாரே நாளை மாலை தங்கள் குழுவினரின் காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார்.
இன்று முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் அன்னா ஹசாரேவின் காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தனர்.

அந்த கடிதத்தை அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத மேடையில் ஹிந்தி நடிகர் அனுபம்கெர் வாசித்தார். அந்த கடிதத்தில் உங்களின் இந்த உணர்வுக்கு மத்தய அரசு செவி சாய்க்கவில்லை. அவர்களுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. ஆனால், உங்கள் உடலை வருத்திக் கொண்டு இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டால், மக்களுக்கு நன்மை கிடைக்க வழியில்லை. எனவே உண்ணாவிரதத்தைக் கைவிடவேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக் கொண்டிருப்பதை அனுபம்கெர் வாசித்தார்.

இதை அடுத்து அன்னா ஹசாரே தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார். மேலும் இந்த உண்ணாவிரதம் மாலை முற்றுப் பேரும் என்றாலும், மாற்று அரசியலை உருவாக்கி தீருவேன் என்றும் அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் பேசியிருக்கிறார்.

இந்த மாற்று அரசியலை உருவாக்கும் முயற்சியில் இரண்டு வருடங்கள் நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ள அன்னா ஹசாரே, தனது கட்சியின் முதுகெலும்பாக இளைஞர்கள் செயல்படுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

.

கடைசியாக அரசியலில் மக்கள் மாற்று அரசியலை விரும்புவதால், தான் மாற்று அரசியல் அமைக்க முடிவு செய்திருப்பதாகவும் அன்னா ஹசாரே ஜந்தர்மந்தரில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரயில் விபத்து:விசாரணை தீவிரம்


கடந்த திங்கட்கிழமை, அன்று நடந்த தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்துக்கு, மின்கசிவு காரணமில்லை என சில அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதையடுத்து இது நாசவேலை காரணாமாக ஏற்பட்ட சம்பவமா எனும் கோணத்தில் விசாரணை தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரயிலில் 20 வது இருக்கை எண்ணிலிருந்து 41 வது இருக்கைவரை முதலில் தீப்பிடித்தது என தெரிவிக்கப்படும் போதும், அங்கு செல்போன் சார்ஜ் போடும் வசதிகள் ஏதும் பொருத்தியிருக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், மின்கசிவு காரணாமாக ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்திருந்தாலும், ஒரு சில நிமிடங்களில் தீ கொழுந்து விட்டு எரிந்ததுடன், உடனடியாக அனைவரையும் எரித்துச்சாம்பலாக்கும் வீரியம் உருவாக்கியிருக்காது என சந்தேகிக்கப்படுகிறது.

தீப்பிடித்த பெட்டிக்குள் ஏதேனும் அபாயகரமான வெடி மருந்துகள் யாரேனும் பெட்டிக்குள் வைத்திருந்து அது சிறு வெப்ப அழுத்தத்தினால் தீப் பிடித்து விபத்தாக மாறியிருக்கலாம் என்கிற கோணத்தில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

தீப்பிடித்து எறிந்த ரயில் பெட்டியில் முன்பதிவு செய்தவர்கள் பலரும் அன்று பயணம் செய்யாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த முன்பதிவு இருக்கைகளை டிடிஆர் வேறு சிலருக்கு ஒதுக்கிக் கொடுத்ததாகவும், எஸ் 11 ரயில் பெட்டியில் இருக்கை எண்ணிக்கைகளுக்கு அதிகமாகவே பயணிகள் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி அவசரமாக டிக்கெட் வாங்கிப் பயணித்தவர்கள் பற்றி டிடிஆரையும் விசாரிக்கும் பொருட்டு தனிமையில் அவர் விசாரிக்கப் பட்டு வருவதாகவும் தெரிகிறது. இதில் யாரேனும் இந்த நாசவேலையில் ஈடுபட்டனரா எனும் கோணத்தில் விசாரிக்கப்படுகிறது.

எதிர்பாராது வைத்திருந்த வெடி மருந்தா, அல்லது நாசவேலை காரணமாக வெடி மருந்து வைக்கப் பட்டதா என்பது போகப்போக விசாரணையில் தெரிய வரும் என்றாலும், எஸ் 11 ரயில் பெட்டியில் இருக்கை எண் 20 , 41 க்கு இடையில் பெரிய ஓட்டை இருப்பதால் ஏதேனும் வெடிபொருட்களால் ஏற்பட்ட விபத்தாகத்தான் இருக்கும் என்பது தெரியவருவதால், நாசவேலை காரணமா என்கிற ரீதியில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகத் தெரிகிறது

புனேயில் அடுத்தடுத்து 5 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு


புனே நகரில் நேற்று புதன்கிழமை 5 இடங்களில் அடுத்தடுத்து ஐந்து குண்டுகள் வெடித்துள்ளன. 6வது குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் உள்துறை அமைச்சராக (Home Minister) சுஷில் குமார் ஷிண்டே பதவி ஏற்றதன் பின்னர் இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து புனேயில் உள்ள தியேட்டர் ஒன்றுக்குச் செல்லவிருந்த திட்டத்தை இவர் கைவிட்டார்.

போலிஸாரின் கவனத்தை திருப்புவதற்காகவும், பயம்காட்டுவதற்காகவும் வேண்டுமென்றே இக்குண்டுத்தாக்குதல்கள் திட்டமிட்டு  மேற் கொள்ளப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குண்டுகள் பெரிதாக ஆபத்தானவையல்ல. அதிகளவு சக்தியில்லாத குண்டுகள் என தெரிவிக்கப்படுகின்றது.

புனே நகரின் மிகவும் பிஸியான ஜுங்க்லீ மஹாராஜ் வீதியில் இக்குண்டுத்தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. சாலையோர  குப்பைத் தொட்டியின் அருகில் முதல் குண்டு வெடித்ததாகவும், அடுத்து டெக்கான் சாலை, இதனை அடுத்து கந்தர்வா திரை அரங்கம் அருகில் என்று அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நியூடெல்லி மற்றும் மும்பையிலிருந்து புனே நகருக்கு விரைந்துள்ளது.

கடந்த 2007 ம் ஆண்டு பெப்ரவரியில் புனே நகரிலுள்ள ஒரு பேக்கரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 9 பேர் பலியாகியும் 57 பேர் படுகாயமடைந்தும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம், மத்திய அரசுக்கு ஒரு அபாய அறிவிப்பு, இதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும் என பாஜக  தெரிவித்துள்ளது

டெசோ மாநாட்டின் மைய நோக்கத்தைப் புரிந்துகொண்டு ஆதரவு அளிக்கவேண்டும்: கருணாநிதி


ஈழத் தமிழர்களின் காயத்திற்கும், துன்பத்திற்கும் மருந்து போடும் விதமாகத்தான் டெசோ மாநாடு நடத்த இருக்கிறோம்.
எனவே டெசோ மாநாட்டின் மைய நோக்கத்தை புரிந்து கொண்டு, மாநாட்டில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
  
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை, பாதுகாப்பு போன்ற விஷயங்களுக்காக நடத்தப் படும் மாநாட்டில் சரத் பவார், சரத் யாதவ் போன்ற பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் பலரும் பல நாடுகளில் இருந்து கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்து இணையதளத்தில் தொடர்பு கொள்வதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி உயர்த்த இந்த டெசோ மாநாடு வழிவகை செய்யும் என்று தான் நம்புவதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

Wednesday 1 August 2012

டா‌க்டரே க‌‌ற்ப‌ழி‌த்த கொடுமை

சி‌‌‌கி‌ச்சை‌க்கு வ‌ந்த இள‌ம்பெ‌ண் ஒருவரை ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்த டா‌க்டரே க‌‌ற்ப‌ழி‌த்த கொடுமை மதுரையில் ‌நட‌ந்து‌ள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ரிஷபம் கிராமத்தை சேர்ந்த ‌பிள‌ஸ் 2 மாண‌வி உமா (பெயர் மாற்ற‌‌ம்), நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்ட உமாவை பெ‌ற்றோ‌ர் ஊரு‌க்கு அழை‌த்து வ‌ந்தா‌‌ர்.

மதுரை சொக்கலிங்க நகர் பகுதியில் உள்ள தனியார் மரு‌த்துவமனை‌க்கு உமாவை அவரது தாத்தாவும், மாமாவும் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். உமாவை பரிசோதனை செய்த டாக்டர் சங்கரநாராயணன் (52), டைபாய்டு காய்ச்சல் போல இருப்பதால் 3 நாட்களுக்கு தொடர்ந்து குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்று கூறியு‌ள்ளா‌ர்.

இதனா‌ல் உமாவு‌க்கு காலையும், மாலையும் மரு‌த்துவமனை‌யி‌ல் குளுக்கோஸ் ஏற்றி ‌வீ‌ட்டி‌ற்கு அழைத்துச்சென்று வ‌ந்து‌ள்ளனர் தாதாவு‌ம், மாமாவு‌ம். நேற்று முன்தினம் மாலை உமாவு‌க்கு குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டிருந்தது. அ‌ப்போது, தாத்தாவும், மாமாவும் பழங்கள் வாங்குவதற்காக வெளியே சென்று‌வி‌ட்டன‌ர்.

அப்போது உமா அறை‌க்கு வ‌ந்த டாக்டர் சங்கரநாராயணன் உடல்நிலை குறித்து விசாரித்து‌ள்ளா‌ர். அப்போது வயிற்றுப்பகுதியில் வலிப்பதாக கூ‌‌‌றி‌யி‌க்‌கிறா‌ர் உமா. வயிற்றுப்பகுதியை கையை வை‌த்து ப‌ரிசோ‌தி‌‌த்த டாக்டர், திடீரென்று உமா ‌மீது பா‌ய்‌ந்து அவரை க‌ற்ப‌ழி‌த்து‌வி‌ட்டா‌ர்.

அல‌றி துடி‌த்த உமா‌வை ‌வி‌ட்டு‌வி‌ட்டு ஓடிய டா‌க்ட‌ர், ''உறவினர்களிடம் சொ‌ன்னா‌ல் கொலை செய்து விடுவேன்'' எ‌ன்று மிரட்டிவிட்டு வீட்டிற்கு செ‌ன்று‌வி‌ட்டா‌ர்.

ப‌ழ‌ம் வா‌ங்‌கி‌வி‌ட்ட வ‌ந்த தா‌த்தா, மா‌மா‌விட‌ம் தன‌க்கு நே‌ர்‌ந்த கொடுமையை கூ‌றியு‌ள்ளா‌ர் உமா. இதனா‌ல் கொ‌‌தி‌த்தெழு‌ந்த உமா‌வி‌ன் தா‌த்தாவு‌ம், மாமாவு‌ம், ம‌ருத‌்துவமனை முன்பு ‌நி‌ன்று டா‌க்டரை வசைபாடியு‌ள்ளன‌ர். இவ‌ர்க‌ளி‌ன் கூ‌ச்சலை கே‌ட்டு அ‌க்க‌ம் ப‌க்க‌த்‌தின‌ர் கூ‌டின‌‌ர். ‌விப‌ரீத‌ம் அ‌திக‌ரி‌க்கவே டா‌‌க்ட‌ர் ச‌ங்கரநாராயண‌ன் ‌வீ‌‌ட்டை பூ‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

மரு‌‌த்துவமனை‌யி‌ல் இள‌ம்பெ‌ண் க‌ற்‌ப‌ழி‌க்க‌ப்ப‌ட்ட சம்பவம் கா‌ட்டு‌த்‌தீ போ‌ல் பர‌வியதா‌ல் எஸ்.எஸ்.காலனி போலீசார் அங்கு ‌விரை‌ந்து வ‌ந்தன‌ர். டாக்ட‌ரி‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு செ‌ன்ற போ‌லீசா‌ர் அவரை வெளியே வரும்படி அழைத்தனர். ஆனால் ச‌ங்கரநாராயண‌ன் வெளியே வராததால், கதவை உடைத்து கொ‌ண்டு போ‌லீசா‌ர் உ‌ள்ளே புகு‌ந்து அவரை கைது செ‌ய்தன‌ர்.

பிடி‌ப்ப‌ட்ட காமவெ‌றி டா‌‌க்ட‌ர் ச‌ங்கரநாராயண‌ன் ‌மீது கற்பழித்தல், பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செ‌ய்ய‌ப்ப‌ட்டது. கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட டா‌க்டரை மதுரை மாஜிஸ்திரேட்டு ‌நீ‌திம‌ன்ற‌ ‌நீ‌திப‌தி மா‌‌ரீ‌‌ஸ்வ‌ரி‌யிட‌ம் போ‌லீசா‌ர் ஆஜர்படுத்தினர்.

வரு‌ம் 14ஆ‌ம் தேதி வரை காவலில் வைக்கும்படி உத்தரவிட்ட ‌நீ‌திப‌தி‌யிட‌ம், தான் டாக்டர் என்பதாலும், வருமான வரி செலுத்துபவர் என்பதாலும் தன்னை சிறையில் முதல் வகுப்பில் அடைக்க வேண்டும் என்று டாக்டர் கேட்டு‌ள்ளா‌ர்.

சிகிச்சைக்கு வந்த சிறுமியை கற்பழித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் சிறப்பு பிரிவு வழங்க ‌‌நீ‌திப‌தி மறு‌த்து‌வி‌ட்டா‌ர். இதையடுத்து கைதிகளுடன் சிறையில் டாக்டர் சங்கரநாராயணன் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மதுரை பெரிய மரு‌த்துவமனை‌யி‌ல் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. டாக்டருக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்ப‌ட்டது.

சி‌க‌ி‌ச்சை‌க்கு வ‌ந்த ஒரு பெ‌ண் நோயா‌ளி‌யிட‌ம் காமவெ‌றி ‌பிடி‌த்த டா‌க்ட‌ர் இ‌ப்படி நட‌ந்து கொ‌ண்டது டா‌க்ட‌ர்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. ‌ஒரு பு‌னிதமாக மரு‌த்துவ தொ‌ழி‌ல் இ‌ப்படி‌ப்ப‌ட்ட டா‌க்ட‌ர்களா‌ல் கெடுவது வேதனையாக‌த்தா‌ன் இரு‌க்‌கிறது

ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஓய்வூதிய திட்டம் : தமிழக அரசு


சென்னை, ஆக. 1 : தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், அங்கன்வாடி மையங்களில், இணை உணவு, சமைக்கப்பட்ட சூடான மதிய உணவு, முட்டை, ஆகியவற்றுடன் பள்ளிசாரா முன்பருவக் கல்வியும்  அளிக்கப்படுகின்றன. மேலும், இந்த மையங்களில் கர்ப்பிணி பெண்கள், வளர் இளம் பெண்கள், முதியோர்கள் ஆகியோருக்கு புரத சத்து மிக்க, சத்தான, சூடான, மதிய உணவு வருடத்தில் 365 நாட்களும் வழங்கப்படுகின்றன.  தற்பொழுது தமிழகம் முழுவதிலும் உள்ள 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு தினந்தோறும் 31 லட்சம் பயனாளிகள் வருகை புரிகின்றனர்.  இந்தியாவிலே தமிழகத்தில் மட்டும் தான், ஓய்வூதியம் பெறும் முதியோருக்கு  சமைக்கப்பட்ட சூடான, மதிய உணவு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகின்றன.இந்த அங்கன்வாடி மையங்களில் புகையில்லா சூழ்நிலையை உருவாக்கும் வகையிலும், சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், முதற்கட்டமாக 16,645 மையங்களில் உள்ள சமையலறைகளில் மாசற்ற சுற்றுச் சூழலுடன் கூடிய ‘புகையில்லா சமையலறை’ ஒன்று அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டார். இதன்படி, எரிவாயு அடுப்பு, எரிவாயு இணைப்பு மற்றும் அழுத்தக்கலன் (பிரஷர் குக்கர்) ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டு, 16,645 அங்கன்வாடி மையங்களில் புகையில்லா சமையலறை அமைக்கப்பட்டுள்ளன.தற்பொழுது இந்த ஆண்டு, அதாவது  2012-2013-ஆம் ஆண்டில் 3 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில், இரண்டாவது கட்டமாக 5,000 அங்கன்வாடி மையங்களில் உள்ள சமையலறைகளை நவீனமயமாக்கும் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.             மேலும் இந்த மையங்களுக்கு அதிக அளவில் குழந்தைகள் ஊட்டச் சத்து உணவை பெறுவதற்காகவும், 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிசாரா முன்பருவக் கல்வி பெறுவதற்காகவும் வருகை புரிவதை ஊக்குவிக்கும் பொருட்டு, 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இரண்டு வண்ண உடைகள் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் முன்னோடித் திட்டத்தை துவக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக, சென்னை, வேலூர், திருச்சிராப்பள்ளி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2,01,032 குழந்தைகள் பயனடையும் வகையில் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் இந்த திட்டத்தை அமல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  திருநங்கையர்களை சமுதாய நீரோட்டத்தில் கொண்டு வரும் வகையிலும், அவர்கள் சமுதாய மற்றும் பொருளாதார ஏற்றம் பெற ஏதுவாகவும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்களின் நலனுக்காக “ஆதரவற்ற திருநங்கையர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்” என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின்படி, 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள திருநங்கையர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஓய்வூதியமாக 1000 ரூபாய் வழங்கப்படும். இதற்காக 1 கோடியே 17 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

நிதிஅமைச்சரானார்ப.சிதம்பரம்


மத்திய அமைச்சரவையில் தற்போது சிறிய அளவிலான இலாகா மாற்றம் நடந்துள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை குறிப்பு தெரிவிக்கிறது.
பிரதமர் ஏற்படுத்தியுள்ள இத்தற்காலிக மாற்றத்தின் படி உள்துறை அமைச்சர் பொறுப்பை சுஷில்குமார் ஷிண்டேவுக்கும், சுஷில் குமார் வகித்த மின்துறையை வீரப்ப மொய்லிக்கு கூடுதல் பொறுப்பாகவும் பிரித்துக் கொடுத்துவிடப்பட்டுள்ளதாகவும், நிதி அமைச்சர் பொறுப்பு  ப. சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், அதிகாரப் பூர்வத் தகவல்களாக குடியரசுத் தலைவர் மாளிகை தகவல் தெரிவிக்கிறது. தற்போது இச்சிறிய சிறிய அளவிலான இலாகா மாற்றம் போதும். அமைச்சரவை விரிவாக்கம் பற்றி செப்டெம்பரில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் காங்கிரஸ் தலைமை முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

மாவோயிஸ்டுக்கள் அச்சுறுத்தல், தேசிய அளவில் பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க முடியாமல் போனது. அசாம் இன மோதலை தடுக்க தவறியது என பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருவதாலும்,
இதையடுத்தே அவரை நிதி அமைச்சராக அரசு நியமித்திருக்கலாம் என கூறப்படுகிறது. கனவு பட்ஜெட் நாயகன் என வட மாநிலத்தவரால் ப.சிதம்பரம் அழைக்கப்படுகின்றார். ஏற்கனவே இரு முறை நிதி அமைச்சராக இருந்துள்ள ப.சிதம்பரம், கடந்த சில வருடங்களாக இந்தியா சந்தித்து வரும் குறைவான பொருளாதார வளர்ச்சி வீதத்தை மீண்டும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பார் என தொழில் வர்த்தக துறையினர் எதிர்பார்த்துள்ளனர். இதே போன்று மின்சார துறை அமைச்சு பதவியிலிருந்து சுஷில் குமார் ஷிண்டே  மாற்றப்பட்டதற்கும் அவர் அத்துறையில் திறம்பட செயற்படாமல் போனதே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து வீரப்ப மொய்லிக்கு மின்சாரத் துறை வழங்கப்பட்டுள்ளது. மொய்லி முன்னர் சட்ட அமைச்சராக இருந்தார். பின்னர் கம்பெனி விவகாரத்துறை அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிகைப்பற்றியது


இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 251 ஓட்டங்களை எடுத்தது. குமார் சங்ககார இப்போட்டியில் விளையாடவில்லை. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தரங்க 51 ஓட்டங்களையும். திரிமனே 47 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். பந்து வீச்சில் மனோஜ் திவாரி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 42.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. விராத் கோலி 128 ஓட்டங்களையும் சுரேஷ் ரைனா 58 ஓட்டங்களையும் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சுரேஷ் ரைனா இத்தொடரில் எடுத்த மூன்றாவது அரைச்சதம் இதுவாகும். விராத் கோலி இத்தொடரில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இப்போட்டியில் வென்றதன் மூலம், மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி ஒரு நாள் போட்டி ஆகஸ்டு 4ம் திகதி நடக்கவிருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணித்தது போலவே, குடியரசு துணைத் தலைவர் தேர்தலையும் தேமுதிக புறக்கணிக்கும் என்று, தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், "குடியரசு தலைவர் தேர்தலைப் புறக்கணித்தது போல, குடியரசு துணைத் தலைவர் தேர்தலையும் தேமுதிக புறக்கணிக்கும். இதனால், தேர்தலில் நிற்பவர்கள் தோற்பார்கள் என்பது கருத்தல்ல. குடியரசுத் தலைவரால் தமிழ் நாட்டுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை. எனவே எங்கள் எதிர்ப்பைக் காண்பிக்கிறோம்.
  
அதிமுக ஆட்சியில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. எந்த நலத் திட்டங்களும் ஒழுங்காக மக்களை சென்று அடைவதில்லை. எனது பிறந்தநாளில் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அப்போது மக்களுக்காக சில நலத்திட்டங்களை மேற்கொள்ளவிருக்கிறேன்" என்று கூறினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்