Thursday 13 September 2012

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்திருந்தார்.
அவரை ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், உள்ளிட்டோர் விமான நிலையத்தில் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின் ஸ்ரீரங்கத்திற்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரமாண்டமாக வரவேற்றனர்.

இதனிடையே  காலை தொடங்கி இரவு வரை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், பழனி முருகன் கோவிலில் தொடங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதின் படி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.

இதனிடையே ஸ்ரீரங்கத்தில் நடந்த  விழா ஒன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதி மேலூரில் 10 எக்டேர் பரப்பளவில் ரூ.8.67 கோடி மதிப்பில் அமைய உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, ஸ்ரீரங்கம்- திருவானைக்காவல் பாதாள சாக்கடை திட்டம், ஸ்ரீரங்கம் உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம் உள்ளிட்ட முடிவடைந்த திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதனுடன் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி, திருச்சி, ஸ்ரீரங்கம் நகரங்கள் விழாக்கோலம் பூண்டு இருந்ததுடன் திருச்சி விமான நிலையம் முதல் ஸ்ரீரங்கம் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டும் இருந்தது.

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம்

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் யுரேனியம் நிரப்புவதற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் எரிசக்தி நிரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னர் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பூவுலக நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையிட்டனர்.

அணுச்அக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் பாதுகாப்பு பரிந்துரைகளில் 6 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதம் 9 பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்ப தடை விதிக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்க் வந்த போது மனு தாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிட்டார்.

'எனினும் யுரேனியம் நிரப்ப தடை விதிக்க முடியாது. நாங்கள் மனுதாரருக்கோ கூடங்குளம் அணு உலை நிர்வாகத்திற்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் அங்கு வாழும் ஏழை மக்களின் பாதுகாப்புக்கே முதலிடம் கொடுக்கிறோம். அவர்களது பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும். அவர்களுக்கு தங்களது வாழ்க்கை பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ள உச்சநீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 20 ம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளது.

இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை என அணு சக்தி ஒழுங்குமுறை ஆணைய தலைவர் எஸ்.எஸ். பஜாஜ் தெரிவித்துள்ளார்.

அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தை சேர்ந்த 7 பேர் கொண்ட குழு, அணு மின் நிலையத்தின் இறுதிக்கட்ட பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், தாம் ஏற்கனவே பாதுகாப்பு தொடர்பாக வழங்கிய 17 பரிந்துரைகளில் ஒரு சிலவற்றை நிறைவேற்றும் பணி கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகளால் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து பரிந்துரைகளையும் 6 மாதம் தொடக்கி 2 வருடங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற காலக்கெடுவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Friday 7 September 2012

சிவகாசி பட்டாசு ஆலை தீவிபத்து12பேரை கைது

சிவகாசி பட்டாசு ஆலை தீவிபத்துத் தொடர்பாக போலீசார் 12பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிகிறது.
நேற்று முன் தினம் சிவகாசி அருகே முதலிபட்டியில் உள்ள ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு 38 பேர் பலியானதோடு 70க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். விருதுநகர், சிவகாசி, மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 40பேரின்  உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இவ் விபத்துத் தொடர்பாக போலீசார் குத்தகைதாரர் பால்பாண்டி உள்பட 12பேரை கைது செய்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் முருகேசன் தலைமறைவாகிவிட்டதால் அவரை தீவிரமாக போலிசார் தேடிவருகிறார்கள். கிராம நிர்வாக அதிகாரியின் புகாரின்பேரில்  இவ் 12பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதே வேளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா இந்த விபத்து குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி நீதி விசாரணை நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து விசாரனையும் இன்றே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முதலில்  பட்டாசு தொழிற்சாலையின் ஆவணங்களை பரிசீலிப்பதுடன் விதிமுறைகள் மீறி செயல்பட்டிருப்பது ஏற்கனவே தெரியவந்துள்ளதால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் விருது நகர் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தடுத்து விசாரணை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.