Tuesday 31 July 2012

அன்னா ஹசாரே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.


தமது ஆதராவாளர்களால் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அன்னா ஹசாரே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
   அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சாதகமாக செய்திகள் வெயிடவில்லை என்று அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் சிலர் பத்திரிகையாளர்களைத் தாக்கிய சம்பவம் நேற்று நடைபெற்றது.
இதையடுத்து தமது ஆதரவாளர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்ட அன்னா ஹசாரே, இத்தாக்குதலுக்கு அவர்கள் சார்பாக தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் தமது ஆதரவாள்களை வன்முறையில் இறங்கவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
     "அரசு தரப்பில் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த யாரும் தயாராக இல்லை, அப்படி பேச்சுவார்த்தை நடத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். அரசியல் வாதிகளின் ஊழல் நாட்டை சுரண்ட ஆரம்பித்து விட்ட இந்த நேரத்தில், ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்" என்று அன்னா ஹசாரேவின் குழுவினரான சாந்தி பூஷன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

புது தில்லி : சமீபத்திய தீடீர் மின் தடையை தொடர்ந்து இன்று தீடீரென்று இந்தியாவின் கிழக்கு பகுதிக்கு செல்லும் மின்சார கிரிடில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 19 மாநிலங்களில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி, அஸ்ஸாம், பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் மின் தடையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 500 ரயில்கள் மின் தடையால் இயங்க வழியின்றி அப்படியே நிற்கின்றன. தில்லி சாலைகளில் சிக்னல்கள் வேலை செய்யாததால் போக்குவரத்தை சமாளிக்க 4000 காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சப்தர்ஜங்க் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் மத்திய அரசு உடனடி முயற்சி எடுத்து பூடானிலிருந்து மின்சாரம் தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டியுள்ளனர். தில்லி மெட்ரோ உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் இயக்கப்படாததால் மக்கள் ஏமாற்றத்துடன் நிற்கின்றனர். உடன் மின்சார இணைப்பு கொடுக்கப்பட தாம் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சர் சுஷில் குமார் சிண்டே தெரிவித்துள்ளார்.


Monday 30 July 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து


நெல்லூர்: ‌டில்லியிலிருந்து சென்னை ‌நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 30க்கும் மேல பயணிகள் உடல் கருகி பலியாயினர். 20 க்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் நெல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீ பிடித்த ‌‌ரயில்‌ எஸ் -11 கோச்சில்  தீயில் சிக்கி இறந்தது 20 ஆண்கள், 6 பெண்கள், 3 குழந்தைகள் அடங்குவர். இதுவரை 28 உடல்கள் ரயிலில் இருந்து எடுக்கப்பட்டள்ளதாக மாவட்ட எஸ். பி., தெரிவித்துள்ளார்.

டில்லியிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டது.ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்து பின்னர் அதிகாலை 04:30 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எஸ்-11வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறி்ந்து ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ‌பலர் காயமடைந்துள்ளனர்.

நெல்லூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் சம்பவ இடத்திற்‌கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அங்கு கலெக்டர் கூறுகையில், இது வரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர் பெட்டியில் பலியாகியிருக்கக்கூடும் என்றார்.
தூங்கும் வசதி கொண்ட இந்த 2ம் வகுப்பு பெட்டியிலிருந்து காயம் அடைந்தவர்கள் நெல்லூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பெட்டியில் மொத்தம் 72 பயணிகள் இருந்தனர்.

சிகிச்சை பெறுவோர் விவரம்: காயமுற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் விவரம் வருமாறு: ரேகா, வீணா, சாம்பசிவாராவ், வர்மாசிறீஸ், வெங்கடகோடேஸ்வரராவ், வர்மா ஹூசேன்,ராகவன், சுனில்குமார், ஹர்சித், சந்தீப்அக்னிதோத்ரி, அமீர் பிரீத்சிங். ஆகியோர் நெல்லூர் ஆஸ்பத்திரியில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


பலியானவர்கள் யார்? யார்? : இந்த ரயிலில் தீ பிடித்து எரிந்துள்ளதால் இதில் பலியானவர்கள் யார் ? யார் என அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிகம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்க முடியும் என்ற தகவலை தவிர பெயர் விவரம் குறித்து இன்னும் அறியப்படவில்லை.

விபத்தில் தப்பியவர்கள் பேட்டி: விபத்தில் சிக்கிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 11 கோச் தவிர ஏனைய பெட்டிகளுடன் ரயில் சென்னைக்கு காலை 11. 35 மணியளவில் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகள் கூறுகையில்: விபத்து நடந்தபோது காலையில் மழை மற்றும் பனி காரணமாக என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஆனால் புகை மூட்டத்தை மட்டும் பார்க்க முடிந்தது. அலறல் சப்தம் கேட்டது. பலர் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்றனர்.

ஆந்திர முதல்வர் விரைகிறார்: சம்பவம் நடந்த இடத்திற்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி அவசரமாக விரைந்துள்ளார். விபத்து ஏற்பட்ட விவரம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து நேரில் விசாரித்து காயமுற்றவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கிறார். சென்னைக்கு வந்து பின்னர் நெல்லூர் கிளம்புகிறார்.
ஒரு உயிருக்கு 5 லட்சம் நிவாரணம்: விபத்தில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் முகுல்ராய் அறிவித்துள்ளார். விபத்து குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும், காயமுற்றவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தகவல் அறிந்து கொள்ள : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த விபத்து குறித்து தகவல் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. 044- 25357398 ,என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 10 மணியளவில் ஒரு ரயில் அனுப்பிவைக்க ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் விவரம் கேட்க வேண்டுமானால் கீழ் வரும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்: 0861- 2330024, 0861-2328500

Friday 27 July 2012

சென்னை, ஜூலை.28 - தொழிற்கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் உறுப்பினராக உள்ள 22 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் விதத்தில், அவர்கள் வழங்கும் பசுந்தேயிலையின் சந்தை விலையின் அடிப்படையில் கிலோ ஒன்றுக்கு இரண்டு ரூபாய் கூடுதலாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளிலுள்ள பழமையான இயந்திரங்களை மாற்றி உற்பத்தித்திறனை அதிகரிக்கும்  வகையில் மானியம் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும்  இன்றியமையாத தொழிலாக விளங்கும் தேயிலைத் தொழில் தழைப்பதற்கும், தேயிலைத் தொழிலாளர்களின் நிலையை உயர்த்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.  
2001​ஆம் ஆண்டு  பச்சைத் தேயிலையின் விலை கடும் விழ்ச்சி அடைந்திருந்தபோது, அதனை சீரமைக்கும் வகையில்,  அரசு நிறுவன மூலம் `தயாரிக்கப்பட்ட  டீயை ஏல மையங்களில் மாதந்தோறும் 200 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்து, அதனை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவு நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டதையடுத்து,  இந்த டீ,  ஊட்டி டீ என்ற பெயரில் 28.8.2001 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோன்று,  உலகிலேயே முதல் முறையாக சிறு தேயிலை  விவசாயிகள் பயன் பெறும் வண்ணம் டீ சர்வ என்ற தேயிலைக்கான மின்னணு ஏல மையம் ஒன்று   தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் 13.9.2003 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் 2005​ஆம் ஆண்டு தேயிலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியிலிருந்து சிறு தேயிலை தொழிலாளர்களை பாதுகாக்க சிறு தேயிலை விவசாயிகள் பாதுகாப்புத் திட்டம் என்று ஒரு திட்டத்தினையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார்.
அந்த வகையில், மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற 15 தொழிற் கூட்டுறவு  தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ள 22,000 சிறு தேயிலை விவசாயிகளுக்கு பசுந்தேயிலைக்காக  கிலோ ஒன்றுக்கு சராசரியாக வழங்கப்பட்டு வந்த 6 ரூபாய் என்ற விலையை  தனியார் நிறுவனங்களில் பசுந்தேயிலைக்கு வழங்குவதுபோல்  8 ரூபாய் என உயர்த்தி வழங்க   தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்தத் திட்டம் 2012 ​ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிய செயல்படுத்தப்பட்டது. கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பழமையான இயந்திரங்கள் உள்ள காரணத்தால், அவை சிறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்கும் கட்டுப்படியான விலை சந்தை விலையை விட குறைவாக உள்ளது. எனவே கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேயிலை வழங்கும் சிறு தேயிலை விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால், அவர்களுக்கு சந்தை விலையை அனுசரித்து விலை வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில்  தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினராக உள்ள சிறு தேயிலை விவசாயிகளுக்கு பசுந்தேயிலையின் சந்தை விலையின் அடிப்படையில் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வரை கூடுதலாக  ஜுலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வழங்குவதற்கு, 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும்,  நீலகிரி மாவட்டத்திலுள்ள 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், 12 தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் அளவு குறைவாக உள்ள  காரணத்தால் பழமையான இயந்திரங்களை மாற்றி, அவைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும்  மற்றும் தேயிலையின் தரத்தினை மேம்படுத்தவும் மூலதன செலவாக 5 கோடியே 46 லட்சம் ரூபாய் மானியமாக வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  மேலும் இண்ட்கோ சர்வ தனது சொந்த நிதியிலிருந்து பழுதடைந்த கட்டடங்களை 54 லட்சம் ரூபாய் செலவில் பழுதுபார்ப்பதற்கும் அனுமதி அளித்தும் ஆணையிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday 25 July 2012


2ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தாள்

சென்னை : வேகமாக சென்ற பள்ளி பஸ் ஓட்டையிலிருந்து தவறி விழுந்து 2ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தாள். ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்தனர். பள்ளி பஸ்சுக்கு தீவைக்கப்பட்டது. சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் எம்டிசி நகரை சேர்ந்தவர் சேதுமாதவன் (32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா (28). இவர்களுக்கு பிரனவ் (9), ஸ்ருதி (6) என்ற 2 குழந்தைகள்.
 சேலையூர் இந்திரா நகரில் உள்ள சீயோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ருதி 2ம் வகுப்பு படித்து வந்தாள். ஸ்ருதி தினமும் வீட்டில் இருந்து தந்தையின் ஆட்டோவில் முடிச்சூர் அட்டை கம்பெனி பஸ் நிறுத்தம் சென்று அங்கிருந்து பள்ளி பஸ்சில் பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து அப்பாவின் ஆட்டோவில் முடிச்சூர் அட்டை கம்பெனி பேருந்து நிறுத்தம் வந்த ஸ்ருதி, பின்னர் பள்ளி பஸ்சில் சென்றாள். மாலையில் வகுப்பு முடிந்த உடன் பள்ளி பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டாள். பஸ்சில் 60 மாணவ, மாணவிகள் இருந்தனர்.

 உள்ளே இருந்த மாணவிகள் தங்களுக்குள் சீட் மாறி விளையாடினர். அந்த பஸ்சின் நடுவில் பெரிய ஓட்டை இருந்தது. பஸ் சென்ற வேகத்தில், சிறுமி ஸ்ருதி நிலைதடுமாறி அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தாள். பஸ்சின் பின் சக்கரம் ஸ்ருதி மீது ஏறி இறங்கியது. அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் உடல் நசுங்கி ஸ்ருதி இறந்தாள்.
.

இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து சாலையில் இருந்தோர் பதறினர். வேகமாக சென்ற பஸ்சை வழிமறித்து தடுத்து நிறுத்தி, டிரைவரை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர். அப்படியும் ஆத்திரம் அடங்காமல், குழந்தைகள் அனைவரையும் இறக்கிவிட்டு, பஸ்சை தீவைத்துக் கொளுத்தினர். தகவல் அறிந்து தாம்பரம், பீர்க்கன்கரணை போலீசார் சம்பவ இடம் விரைந்து மாணவியின் சடலத்தை மீட்டு குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 விபத்து தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து படப்பையை சேர்ந்த பஸ் டிரைவர் சீமான் கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக பள்ளி வாகனத்தின் உரிமையாளர் யோகேஷ்வரன், பள்ளி தாளாளர் விஜயன் ஆகிய இருவரையும் பிடித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தாம்பரத்தில் இருந்து 2 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து எரிந்து கொண்டிருந்த பஸ் தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் எரிந்து எலும்புக்கூடானது. பள்ளி பஸ்சுக்குள் இருந்த ஓட்டை வழியாக மாணவி விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





.


.








பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது : தமிழக முதலமைச்சர்

கொடநாடு, ஜூலை 25 : கொடநாட்டில் பாங்க் ஆப் இந்தியாவின் கோடநாடு காட்சிமுனை ஏ.டி.எம். மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஈளாடா கிளை ஆகியவற்றை திறந்து வைத்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உரையாற்றினார். அதில், 1906 ஆம் ஆண்டு, 50 லட்சம் ரூபாய் முதலீட்டில் 50 பணியாளர்களுடன் தனியாரால் துவங்கப்பட்ட பாங்க் ஆப் இந்தியா இன்று இந்தியாவில் 4,041 கிளைகளையும், வெளிநாடுகளில் 34 கிளைகளையும் கொண்டு மகத்தான மக்கள் பணி ஆற்றி வருகிறது. 1989 ஆம் ஆண்டிலேயே ஏ.டி.எம். வசதியுடன் கூடிய கணினிமயம் ஆக்கப்பட்ட கிளையை துவக்கிய பெருமை இந்த பாங்க் ஆப் இந்தியாவிற்கு உண்டு. இந்திய நாட்டிற்கு வெளியே முதன் முதலாக 1946 ஆம் ஆண்டு லண்டனில் வங்கிக் கிளையை துவக்கிய பெருமையும், 1974 ஆம் ஆண்டு முதன் முதலாக ஐரோப்பிய நாட்டில் வங்கிக் கிளையை துவக்கிய பெருமையும் இந்த வங்கிக்கு உண்டு.  மொத்தத்தில் அலுவல் ரீதியாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் பாங்க் ஆப் இந்தியா பிரதான இடத்தை வகிக்கிறது.இந்த வங்கியின் மூலம் இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்குத் தேவையானவற்றை பெற வேண்டும், சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும்.“சிறு துளி பெரு வெள்ளம்”, “சிறுகக் கட்டி பெருக வாழ்”  போன்றவை சிறுசேமிப்பின் இன்றியமையாமையை விளக்குகின்றன. “பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது வள்ளுவரின் வாக்கு. பொருளைப் பெறாவிட்டால் பட்டறையில் இரும்பு படுவது போன்று துன்பப்பட வேண்டும் என்பதை உணர்ந்து இங்குள்ள மக்கள் எல்லாம் சேமிப்பில் ஈடுபட வேண்டும். ஒரு மலையிலிருந்து பெருக்கெடுத்தோடும் ஆறு, பயனில்லாத இடங்கள் வழியாக பாய்ந்து கடலில் கலப்பதால் யாருக்கும் எவ்வித பலனும் இல்லை. அந்நீர் அணைகளில் தேக்கப்பட்டு, வாய்க்கால் வழியாக, வயல்களுக்குப் பாய்ந்தால் பயிர் செழிக்கும், உயிர்கள் வாழ வழிவகை ஏற்படும். அது போல, ஒரு மனிதன் தன் உழைப்பினால் ஈட்டிய பணத்தை தனக்கும் தன் நாட்டிற்கும் பயன்பட சேமித்தல் அவசியம். சிறுசேமிப்பின் மூலம் பணம் வீணாகாமல் பெருகுவதோடு, வட்டியும் கிடைக்கிறது; பணம், பாதுகாப்பாகவும் இருக்கிறது. இந்த சேமிக்கும் பழக்கம் சிக்கனத்தை வளர்ப்பதோடு, எதிர்பாராச் செலவுகளுக்கும் கைகொடுக்கிறது. நாம் சேமிக்கும் பணம் நாட்டின் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த சேமிப்பினை இப்பகுதி மக்கள் எல்லாம், வளர்த்துக் கொள்ள வேண்டும். வங்கியில் பணத்தை சேமித்து, அதன் பயன்களை, நீங்கள் அடைய வேண்டும். இது மட்டுமல்லாமல், விவசாயக் கடன், வணிகக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், வீட்டு வசதிக் கடன் ஆகியவற்றையும், இந்த வங்கியிடமிருந்து பெற்று, உங்களுடைய வாழ்க்கையை, நீங்கள் எல்லாம், வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.அதே சமயத்தில், பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. பணத்தை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் பெற்றுவிட இயலாது. பணத்தால் பெற இயலாதவையும் இந்த உலகத்திலே உண்டு.  பணத்தால் நல்ல கட்டில், மெத்தை, தலையணை ஆகியவற்றை வாங்க இயலும். ஆனால் அவை மட்டுமே நமக்கு தூக்கத்தை கொடுக்காது.  பணத்தால் சிறந்த சத்தான உணவு வகைகளை வாங்க இயலும்.  ஆனால் பணம் பசியை ஏற்படுத்தாது. நோய்வாய்ப்பட்டால், அதனை சரி செய்வதற்கு மருந்து மாத்திரைகளை பணத்தால் வாங்க இயலும்.  அழகு சாதனைங்களை பணத்தால் வாங்க இயலும். ஆனால், பணத்தால் உடல் ஆரோக்கியத்தை பெற இயலாது.  எனவே, பணத்துடன் கூடிய நல்ல மனமும் வேண்டும்.  அதுவே எப்பொழுதும் நமக்கு நல்ல மகிழ்ச்சியை தரும்.ஓர் ஊரில் வசதி படைத்த பள்ளிச் சிறுமி ஒருத்தி தனது தந்தையுடன் விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்றாள். அங்கு தனக்கு பிடித்த விளையாட்டுப் பொம்மைகளை அவள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில், தனது அருகில் வசதி குறைந்த ஏழைச் சிறுமி ஒருத்தி, விலை குறைந்த பொம்மைகளை, ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து, தனது தந்தையை நோக்குவதையும்; அந்த பொம்மைக்குரிய பணம் தன்னிடம் இல்லை என அவளது தந்தை தலையாட்டுவதையும்; இதனால் அந்த ஏழைச் சிறுமியின் முகம் வாட்டம் அடைவதையும் கடைசியாக ஒரு சாதாரண பொம்மையை எடுத்துக் கொண்ட ஏழைச் சிறுமியின் முகத்தையும் கவனித்தாள் பணக்காரச் சிறுமி.இதனைக் கண்டு மனம் நெகிழ்ந்த பணக்காரச் சிறுமி தனக்கு வேண்டிய விளையாட்டுப் பொருட்களை எடுத்துக் கொண்டதுடன் அந்த ஏழைச் சிறுமி ஏக்கத்துடன் பார்த்து திருப்பி வைத்துவிட்ட பொம்மைகளையும் எடுத்துக் கொண்டாள். பின்னர், பணம் செலுத்தும் இடத்தில் அதற்கான பணத்தைக் கொடுத்த பணக்காரச் சிறுமி, கடைக்காரரிடம் ஏதோ ரகசியமாக கூறினாள்.  ஒரு சாதாரண பொம்மைக்கான பணத்தை ஏழைச் சிறுமி கடைக்காரரிடம் செலுத்தியவுடன் கடைக்காரர் அந்த சிறுமியிடம், “இன்று 500-ஆவது வாடிக்கையாளருக்கு, நாங்கள் பரிசு ஒன்றை தர முடிவு செய்திருக்கிறோம்.  நீ தான் அந்த 500-ஆவது வாடிக்கையாளர்” எனக் கூறி, பணக்காரச் சிறுமி விலை கொடுத்திருந்த பொம்மைகளை ஏழைச் சிறுமிக்கு வழங்கினார்.இதில் ஏழைச் சிறுமிக்கு, ஏற்பட்ட சந்தோஷத்தை பார்த்து மன மகிழ்ச்சியுடன், மன நிறைவுடன் அந்த பணக்காரச் சிறுமி கடையை விட்டுச் சென்று தனது காரில் ஏறிக் கொண்டாள். பணம் கொடுத்து தான் வாங்கிய விளையாட்டுப் பொருட்களினால் ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட, அதிக மகிழ்ச்சியை அந்த ஏழைச் சிறுமியின் சிரிப்பில் கண்டாள் பணக்காரச் சிறுமி. பிறருக்கு கொடுத்து உதவுவது தான், நமக்கு உண்மையான மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.இது போன்ற உண்மையான மகிழ்ச்சியை வாடிக்கையாளர்கள் மனதில் ஏற்படுத்தும் பணியில் வங்கிகள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வங்கி அதிகாரிகள், இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறும் வகையில் குறைந்த வட்டியில் அதிக தவணை முறையில் அவர்களுக்குத் தேவையான கடன் உதவிகளை வழங்க வேண்டும். இதே போன்று, கடன் பெறுவோரும், வாங்கிய கடனை, தவறாமல் திரும்பச் செலுத்தி, மேலும் பல பயன்களை வங்கி மூலம் பெற வேண்டும். இந்தக் கொடுக்கல் – வாங்கலில்இரு சாராரும் தங்கள் மனசாட்சிக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.ஒருத்தர், விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டார். பயிற்சி முடிந்து தனியாக விமானம் ஓட்ட வேண்டிய கட்டத்தில் பாரசூட் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.அதனால் இவர் ஒரு கடைக்குப் போனார். “ஒரு நல்ல பாரசூட் கொடுங்க”, என்று கடைக்காரரிடம் கேட்டார். கடைக்காரர் பாரசூட்டை அவரிடம் கொடுத்தார். அந்தப் பாரசூட்டை வாங்கிய நபர்,  “ஐயா, நான் இதை வாங்கிக் கொண்டு போகிறேன். நல்லதாக இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இரு முறை பார்த்துத் தந்தால், நலமாக இருக்கும். ஒருக்கால் நான் மேலே இருந்து குதிக்கும் போது  இந்தப் பாரசூட் வேலை செய்யவில்லை என்றால் பிரச்சனையாகி விடும் அல்லவா?” என்று கூறினார்.       உடனே அந்தக் கடைக்காரர், அவரைப் பார்த்து, “சார், அதைப் பற்றி நீங்கள் கொஞ்சம் கூட கவலைப்படாதீர்கள். அப்படி நீங்கள் குதிக்கிற போது, இந்த பாரசூட், சரியாக விரியவில்லை என்று சொன்னால் உடனே திருப்பி எடுத்துக் கொண்டு வாங்க நான் வேறு ஒன்றை மாற்றித் தருகிறேன்” என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னார். இது எப்பேர்பட்ட மனசாட்சி! பாரசூட் விரியவில்லை என்றால், அத்துடன் விமான ஓட்டியின் கதையே முடிந்துவிடும். உயிர் பிரிந்துவிடும்.  பின்னர் எப்படி அவர் கடைக்குச் சென்று வேறு பாரசூட்டை வாங்க முடியும்?  இதுவா மனசாட்சி? இது போல் இல்லாமல் உண்மையான மனசாட்சியுடன் வங்கி அதிகாரிகளும், வங்கி வாடிக்கையாளர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை ஆகியவை வங்கிகள் மூலமாகவே தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசுக்கு வரிகள் மற்றும் இதர இனங்கள் மூலம் வர வேண்டிய வருமானம் வங்கிகள் மூலமாகவே பெறப்படுகிறது. எனது அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் வங்கிகளில் பெருமளவில் வணிக நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. வங்கிகளும், ஏற்றத்தாழ்வற்ற, சமதர்ம சமுதாயம் அமைப்பதற்காக பாடுபடும் தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.விவசாயம், தொழில், வணிகம், சிறுதொழில், பொருளாதாரம் முதலியன செழிக்கும் வண்ணமும், மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும் வண்ணமும், இந்த வங்கியின் பணிகள் அமைய வேண்டும் என்றும், ஈளாடா கிளை, இந்தியாவிலேயே சிறந்த கிளை என்ற நற்பெயரை எய்த வேண்டும் என்றும் வாழ்த்தி, இது போன்ற பல ஏ.டி.எம். மையங்களையும், புதுக் கிளைகளையும் தமிழ்நாட்டிலே பாங்க் ஆப் இந்தியா துவக்கி, மக்களுக்கு மேன்மேலும் நற்பணிகளை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு;இந்த விழா, சீரும் சிறப்பும் மிக்க, நிகழ்ச்சியாக அமைந்திட பணியாற்றிய  வங்கி அதிகாரிகளுக்கும், இந்தப் பகுதியை சேர்ந்த மக்களுக்கும், காவல் துறையினருக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகளை உரித்தாக்குகிறேன் என்று பேசினார்.

Monday 23 July 2012

23 ராமேஸ்வரம் மீனவர்களையும் விடுவிக்கவும்ஜெயலலிதா,

சென்னை, ஜூலை 23 : ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து 15 நாள் சிறைத் தண்டனை விதித்துள்ளது குறித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரியும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.அவர் இன்று பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த 21ம் தேதியன்று ராமேஸ்வரத்தில் இருந்து 5 இயந்திரப் படகுகளில் கட்சத் தீவுப் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர். தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களுக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு உரிமை வாய்ந்த கச்சத் தீவில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு, இலங்கை கடற்படையினர் இவ்வாறு தொடர்ந்து அச்சுறுத்தல் அளித்து வருகின்றனர். அதிலும், மீன்பிடி தடைக் காலம் முடிந்த பிறகு இது அதிகரித்துள்ளது என்று ஏற்கெனவே உங்களுக்குக்  குறிப்பிட்டுள்ளேன்.இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையால், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களது மனதில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களது அடிப்படை வாழ்வாதாரமான மீன் பிடி தொழிலே கேள்விக்குறியாகியுள்ளது.இது குறித்து இருநாட்டு அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடக்கும் போது மட்டும் இலங்கை கடற்படையினர் சில காலம் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் இதுபோன்ற அராஜகப் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.எனவே, இந்த நடவடிக்கையில் உடனடியாக தலையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள 23 ராமேஸ்வரம் மீனவர்களையும் விடுவிக்கவும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த பிரச்னை மீது உடனடியான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Sunday 22 July 2012

பிரணாப் முகர்ஜி25ம் தேதி13வது ஜனாதிபதியாகபதவியேற்கவுள்ளார்

புதுடில்லி:ஜனாதிபதி தேர்தலில், ஐ.மு., கூட்டணி சார்பில் போட்டியிட்ட பிரணாப் முகர்ஜி, 69 சதவீத ஓட்டுகளை பெற்று, அபார வெற்றி பெற்றார். நாட்டின் 13வது ஜனாதிபதியாக, வரும் 25ம் தேதி, அவர் பதவியேற்கவுள்ளார். இதுவரை, முழு நேர அரசியல்வாதியாக இருந்து வந்த பிரணாப், தற்போது, ஜனாதிபதி என்ற மிக உயர்ந்த பதவியை அலங்கரிக்கப் போகிறார்.
ஜனாதிபதியாக உள்ள பிரதிபாவின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், கடந்த 19ம் தேதி நடந்தது. ஆளும் ஐ.மு., கூட்டணி சார்பில், நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி,76, போட்டியிட்டார். இவருக்கு, கூட்டணி கட்சிகளைத் தவிர, தே.ஜ., கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும், ஆதரவு தெரிவித்தன.தே.ஜ., கூட்டணி சார்பில், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சங்மா போட்டியிட்டார். இவருக்கு, தே.ஜ., கூட்டணியில் உள்ள, பா.ஜ., அகாலி தளம் மற்றும் கூட்டணியில் இல்லாத, அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள், ஆதரவு அளித்தன.
:பார்லிமென்ட் வளாகத்தில், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களான பிரணாப், சங்மா முன்னிலையில், ஓட்டுப் பெட்டிகள் திறக்கப்பட்டு, ஓட்டுகள் எண்ணும் பணி, நேற்று காலை துவங்கியது. முதலில், எம்.பி.,க்கள் அளித்த ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டுப் போட்ட, 748 எம்.பி.,க்களில், 527 எம்.பி.,க் களின் ஓட்டுகள், பிரணாப்புக்கு ஆதரவாக கிடைத்தன. சங்மாவுக்கு, 206 எம்.பி.,க்களே ஓட்டளித்திருந்தனர். 15 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
முன்னிலை:மாநிலங்கள் வாரியாக எண்ணப்பட்ட ஓட்டுகளிலும், பிரணாப் முகர்ஜியே தொடர்ந்து முன்னிலை வகித்தார். பா.ஜ., ஆளும் மாநிலங்களை தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும், பிரணாப்புக்கே அதிக ஓட்டுகள் கிடைத்தன. ஆச்சர்யம் அளிக்கும் வகையில், பா.ஜ., ஆளும் கர்நாடகாவில், சங்மாவை விட, பிரணாப்புக்கே அதிக ஓட்டுகள் கிடைத்திருந்தன. கேரளா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பதிவான ஓட்டுகள் அனைத்தும், பிரணாப் புக்கே பதிவாகியிருந்தன. தமிழகத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., ஆதரவு பெற்ற சங்மாவுக்கு, 148 ஓட்டுகளும், பிரணாப்புக்கு 45 ஓட்டுகளும் கிடைத்தன. நான்கு ஓட்டுகள் செல்லாதவை என, அறிவிக்கப்பட்டது.
அனைத்து ஓட்டுகளும், நேற்று மாலை எண்ணி முடிக்கப்பட்டன. இதில், செல்லுபடியான, 10 லட்சத்து 29 ஆயிரத்து 750 ஓட்டுகளில், ஏழு லட்சத்து 13 ஆயிரத்து 763
ஓட்டுகளை பெற்று (69.3 சதவீதம்), பிரணாப் முகர்ஜி அபார வெற்றி பெற்றார்.
சங்மாவுக்கு, மூன்று லட்சத்து 15 ஆயிரத்து 978ஓட்டுகள் கிடைத்ததாக,
தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி தெரிவித்தார்.
பதவியேற்பு:நாட்டின் 13வது ஜனாதிபதியாக, வரும் 25ம் தேதி, பிரணாப்
பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள், ஜனாதிபதி மாளிகையில், நேற்றே
துவங்கி விட்டன.
  மம்தாவும், பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளார்.பிரணாப்முகர்ஜி வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, ராகுல், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் மற்றும் அந்தோணி, சிதம்பரம் உள்ளிட்ட மூத்த மத்திய அமைச்சர்கள், பிரணாப் வீட்டுக்கு வந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிரணாப்பை எதிர்த்து போட்டியிட்ட சங்மாவும் வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ., சார்பிலும், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தனக்கு ஓட்டளித்த அனைவருக்கும், ஒத்துழைப்பு அளித்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பிரணாப் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
:ஜனாதிபதி தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள பிரணாப் முகர்ஜி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிர அரசியலில் உள்ளார். உள்துறை, ராணுவம், நிதி என்று, மத்திய அரசில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், கட்சிக்கும், ஆட்சிக்கும் நெருக்கடியான சூழல் ஏற்பட்ட போது, தன் பழுத்த அனுபவத்தையும், திறமையையும் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் ஆபத்பாந்தவனாக, கடந்த 3 ஆண்டுகளில் திகழ்ந்தார்.இத்தனை ஆண்டுகளாக, முழு நேர அரசியல்வாதியாக இருந்த பிரணாப், முதல் முறையாக, அரசியல் பரபரப்புகளில் இருந்து விலகி, நாட்டின் முதல் குடிமகன் என்ற உயர்ந்த பதவியை வகிக்கவுள்ளார்.
:
பிரணாப் முகர்ஜி நேற்று அளித்த பேட்டியில், எனக்கு, மிக உயர்ந்த பதவி கிடைப்பதற்கு காரணமாக இருந்த நாட்டு மக்களுக்கு, என் இதயப்பூர்வமான நன்றி. மக்கள் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், பணியைச் செய்வேன். அரசமைப்பு சட்டத்தை பின்பற்றி நடப்பேன். நாட்டுக்கு நான் ஆற்றிய பணிகளை விட, நாட்டு மக்கள், எனக்கு மிக அதிகமான பொறுப்புகளை தந்துள்ளனர் என,  கூறினார்.

Saturday 14 July 2012


சென்னை நகரில் குடிநீர் பற்றாக்குறை கருணாநிதியின் குற்றசாட்டுக்கு தமிழக அரசு பதில்


சென்னை நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இல்லை என்றும் நாள் ஒன்றுக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் நடந்துகொண்டிருக்கிறது என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் நடந்து கொண்டிருப்பதாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பட்டிருக்கிறது. அதோடு, 1851 கோடி லிட்டர் தண்ணீர் சேமிப்பில் இருப்பதாகவும்,மேலும்  போரூர், அம்பத்தூர், அயப்பாக்கம், ஏரிகளின் சீரமைப்புப் பணி, மற்றும், திருவள்ளூரில் புதிய நீர்தேக்க ஏரிகள் அமைக்கும் பணி நடப்பதாகவும், சோழவரம் ஏரியை ஆழப் படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கர்நாடக பாஜகவில் குழப்பம் தீர்ந்தபாடில்லை

ஜகதீஷ் ஷட்டர் நேற்று புதிய முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டபின்னும்,
கர்நாடக பாஜகவில் குழப்பம் தீர்ந்தபாடில்லை. உடுப்பி மாவட்ட எம் எல் ஏ, ஸ்ரீனிவாச ஷெட்டி மூலம் மேலும் குழப்பம் நீடிப்பதாகத் தெரிகிறது.
     
ஜகதீஷ் ஷட்டர், முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டபின், ஸ்ரீனிவாச ஷெட்டிக்கு, மந்திரி பதவி கொடுப்பதாக தலைமை பாஜக அறிவித்திருந்ததாகவும், ஆனால், புதிதாக பதவி ஏற்க இருக்கும் மந்திரிகள் பட்டியலில் ஸ்ரீனிவாச ஷெட்டியின் பெயர் வாசிக்கப் படவில்லை என்று தெரிந்ததுமே, ஷெட்டி கதறி அழுதுவிட்டதாகவும் தெரிகிறது.
     
தனது தொகுதியில் நலத்திட்டங்களை நல்லபடியாக செய்து வந்ததால்தான், தான் மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டதாகவும், அப்படிப்பட்ட தனக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை, எப்படி நான் எனது தொகுதி மக்களின் முகத்தில் விழிப்பேன் எனக் கூறி, ஆளுனரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டுத்தான் திரும்ப ஊருக்கு செல்வேன் என்றும் ஸ்ரீனிவாச ஷெட்டி காத்திருப்பதாகத் தெரிகிறது.
     
இதற்கிடையில், ஸ்ரீனிவாச ஷெட்டி தொகுதி மக்கள் நேற்று முதலே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் கடை அடைப்பு போன்ற எதிர்ப்புக்கள் இன்று நடந்து வருவதாகவும் தெரிகிறது.
மேலும் இவரைப்போலவே குமாரசாமி எம் எல் ஏ போன்ற 4 எம் எல் ஏ க்கள் தங்களுக்கும் மந்திரி பதவி கொடுக்கவில்லை என்று கூறி, தங்கள் பதவியை ராஜினாமா செய்ய ஆளுனரை சந்திக்க காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Saturday 7 July 2012

இந்தியாவின் எப்பகுதியிலும் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்க கூடாது : ஜெயலலிதா

இலங்கைவ் விமானப்படை வீரர்களுக்கு இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்க கூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
தாம்பர விமானநிலையத்தில் பயிற்சி பெற வந்த இலங்கை விமானப்படை வீரர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்த போதும், அவர்கள் விமானம் மூலம் பெங்களூரின் எலகங்கா விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்களுக்கு பயிற்சி தொடரவிருப்பதாகவும் தகவல் முரண்பட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது குறித்து தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள ஜெயலலிதா மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று, சிங்களர்களுக்கு சமமான உரிமைகளை பெறும் வரை, பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது வாய் மூடி மவுனியாக உள்ள மத்திய அரசு தமிழக மக்களை அவமானப்படுத்தும் விதமாக, இலங்கை நாட்டின் ஒன்பது விமானப்படை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்தில் ஒன்பது மாத காலம் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கு எனது கடும் கண்டனத்தை 5.7.2012 அன்று தெரிவித்து இருந்தேன்.

தமிழர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல் இது போன்ற தமிழர்களுக்கு எதிரான செயலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்றும் நான் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே கருத்தைத் தெரிவித்து இருந்தன.

தமிழர்களுக்காகவே பாடுபடுவதாக சொல்லிக்கொள்ளும் ஒரு தலைவர் ''அந்தச்செய்தி உண்மையாக இருக்குமானால் அப்படி பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது. பயிற்சிக்கு வந்தவர்களை உடனடியாக மத்திய அரசு திருப்பி அனுப்புவதே சரியாக இருக்கும்'', என்று இது குறித்து பட்டும் படாமலும், வெறும் வாய் வார்த்தையாக பதில் அளித்து இருக்கிறார்.

எனினும், இலங்கை நாட்டின் விமானப்படை வீரர்களுக்கு தாம்பரம் விமானப்படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு, இலங்கையின் ஒன்பது விமானப்படை வீரர்களையும் பெங்களூரூவிலுள்ள எலகங்கா விமானப்படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்காக 6.7.2012 அ‌ன்று விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம், தமிழர்களுக்கு, தமிழ் இனத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு சாதகமாக தி.மு.க அங்கம் வகிக்கும் மத்திய அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக, போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் போர்க்குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகள் சபை மூலம் தீர்மானிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம் ஆகும். இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதைத் தவிர்த்து விட்டு, பெங்களூரில் பயிற்சி அளிப்பதை தமிழர் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இலங்கை விமானப்படை வீரர்களுக்கு, இந்தியாவின் எந்த ஒரு இடத்திலும் தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும், ஒன்பது இலங்கை விமானப்படை வீரர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஆவன செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று கூறினார்.

Friday 6 July 2012

தேசிய ஆலோசனைக் குழுக்கூட்டம் டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று கூடுகிறது


தேசிய ஆலோசனைக் குழுக்கூட்டம் டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று கூடுகிறது.
இதில் 2010ம் ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்யவுள்ளதுடன், இன்னும் பல முக்கிய முடிவுகள் குறித்தும், முக்கிய மசோதாக்கள் பற்றியும் விவாதிக்க இருப்பதாக தெரிகிறது. முக்கியமாக, பின்தங்கிய மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திட்டங்கள் வகுக்கப்படலாம் எனவும், ஏற்கனவே தேசிய ஆலோசனை குழு சமர்பித்திருக்கும் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்படலாம் எனவூம் எதிர்பார்க்கப்படுகிறது.
    
மேலும் முறைசாராத் தொழில் செய்பவர்கள், மற்றும் சாலையோரக் கடைகள் வைத்திருப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் இவர்களுக்கு ஓய்வூதியத்துடன் காப்பீட்டுத் திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்தும், மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்குவது போன்ற பலமுக்கிய விஷயங்களும் விவாதிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன