Wednesday 24 October 2012

தமிழக அரசின் மின் தேவைபரிசீலிக்கப்படும்மத்திய மின்துறை இணை அமைச்சர் வேணுகோபால்

தமிழக அரசின் மின் தேவை குறித்து முதல்வரின் கடிதம் பரிசீலிக்கப்படும் என மத்திய மின்துறை இணை அமைச்சர் வேணுகோபால் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடுமையான மின் தட்டுப்பாடு காரணமாக கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்கும் வகையில் மின்சார சேவை கட்டமைப்புகளை மாற்றி அமைக்க உத்தரவிடுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து மத்திய மின்துறை இணை அமைச்சர் வேணுகோபால் மத்திய அரசு தமிழகத்தில் நிலவும் மின் வெட்டு குறித்து அறிந்துள்ளது,  இது தொடர்பாக தமிழக முதல்வர் அனுப்பியுள்ள கடிதம் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ள வேணுகோபால் மின்சாரம் வரும் வழித்தடங்களில் சில பிரச்னைகள் இருப்பதாலே தமிழகத்துக்கு மின் தட்டுப்பாடு பிரச்சனை இருப்பதாகவும் 2014க்குள் இவை அனைத்தும் சீர்செய்யப்பட்டு மின் வெட்டு பிரச்னை சரிசெய்யப்பட்டு விடும் எனவும் கூறியிருப்பதாக தெரிகிறது. கூடங்குளம் உற்பத்தியில் தமிழகத்திற்கான மின்சார ஒதுக்கீடு குறித்து, மத்திய அரசே முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்திருப்பதாக தெரிகிறது.

வரும் ஞாயிற்றுக் கிழமை மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் தகவல் வெளியாகி உள்ளது.

வரும் ஞாயிற்றுக் கிழமை மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இருக்கும் என்று உறுதியானத் தகவல் வெளியாகி உள்ளது.
பலதடவை மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், இந்த முறை கண்டிப்பாக மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 21 ந் திகதி திரிணாமுல் காங்கிரஸ் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிக் கொண்ட பின்னர், மத்திய அமைச்சரவையில் ரயில்வேத் துறை உள்ளிட்ட 6 அமைச்சரவைப் பதவிகள் காலியாக இருக்கின்றன

மேலும் பல முக்கிய அமைச்சர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இலாகாக்களை கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அமைச்சரவையின் மாற்றம் நடக்க உள்ளது. இந்த முறை முக்கியமாக சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்றும் தெரிகிறது. அவர் புனித ஹஜ் பயணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வருவதால், இந்த முறை ராஜினாமா செய்து விட்டு புனித பயணம் மேற்கொண்ட பின்னர், 2014 க்கான தேர்தல் கள  கட்சிப் பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரிகிறது.

ராகுல் காந்தி இந்த முறையும் அமைச்சரவைப் பதவியை ஏற்றுக் கொள்வது சந்தேகமே என்று தெரிகிறது. மாறாக இவர் ஆதரவு பெற்ற இளம் எம்பிக்களுக்கு, இந்த முறை அமைச்சர் பதவி கொடுக்கப் படும் என்றும் தெரிகிறது.

Tuesday 23 October 2012

முக அழகிரியை சந்தித்தார் ஸ்டாலின்.

திடீரென்று மதுரை சென்று, தனது சகோதரர் முக அழகிரியை சந்தித்தார் ஸ்டாலின்.
விபரம் கேட்டபோது கூற மறுத்து விட்டதாக தெரிகிறது.

முக அழகிரியை சந்திப்பதற்காக ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் மதுரைக்கு சென்றிருந்ததாக தெரிகிறது. இருவரும் சந்தித்து சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றி உள்ளனர். அழகிரியின் மகன் துரை தயாநிதியின் மீதான புகார் குறித்தும் தொடர்ந்து அவர் தலைமறைவாக உள்ளது குறித்தும் பேச்சுவாரத்தை நடத்தியிருப்பார்கள் என்று பலரும் கணித்தாலும் சந்திப்பிற்கான காரணத்தைக் கூற ஸ்டாலின் மறுத்து விட்டதாகத் கூறப்படுகிறது.

மாறாக, அதிமுக எம்பி தம்பிதுரை மீதான நில மோசடி வழக்கை ஜெயலலிதா தலைமையிலான காவல்துறையினர் விசாரிக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் கிரானைட் சுரங்க முறைகேடு வழக்கில் சிக்கி, தொடர்ந்து தலைமறைவில் இருக்கும் துரை தயாநிதியை பற்றி தெரிந்து கொள்ள, தனிப்படையினர் நேற்று நடிகர் மகத்திடம் விசாரணையைத் துவக்கி உள்ளனர் என்று தெரிகிறது. மங்காத்தா படத்தில் நடித்து இருக்கும் நடிகர் மகத் துரை தயாநிதியின் நெருங்கிய நண்பர் என்றும், இதன் காரணமாகவே மகத்திடம் காவல்துறை தனிப்படையினர் விசாரணையைத் துவக்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

சின்மயி விவகாரம் : சமூக வலைத்தளங்களால் ஒருவர் கைதாவது இதுவே முதன்முறை?

தென்னிந்திய பாடகி சின்மயி பற்றி டுவிட்டர் மூலம் அவதூறு பரப்பினார் என குற்றம் சாட்டப்பட்டிருந்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்மயின் புகாரின் பெயரில் சென்னை மாநகர காவல்துறையினரின் கணிணி குற்றப்பிரிவினர் குறித்த பேராசிரியர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இக்கைது இடம்பெற்றுள்ளது.  இப்பின்னணியில் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு ஒருவர் கைதாவது இதுவே முதல்தடவை என கூறப்படுகிறது. 

சமீப காலமாக, அரசியல் பிரபலங்களையும், என்னை போல் சினிமா உலகில் இருப்பவர்களையும் மிகவும் கேவலாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பிரதமர் உளட்பட அனைவரையும் தவறாக இணைய தளத்தில் சிலர் சித்தரித்துவருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ள சின்மயி, இதனால் தன்னை போன்றவர்கள் பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று கேட்டுக்கொண்ட பிறகும், குறித்த 6 பேர் கொண்ட கும்பல் தம்மை பற்றி அவதூறு பரப்பலை நிறுத்தவில்லை எனவும் காவல்துறையினரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.