Wednesday 1 August 2012

ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஓய்வூதிய திட்டம் : தமிழக அரசு


சென்னை, ஆக. 1 : தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், அங்கன்வாடி மையங்களில், இணை உணவு, சமைக்கப்பட்ட சூடான மதிய உணவு, முட்டை, ஆகியவற்றுடன் பள்ளிசாரா முன்பருவக் கல்வியும்  அளிக்கப்படுகின்றன. மேலும், இந்த மையங்களில் கர்ப்பிணி பெண்கள், வளர் இளம் பெண்கள், முதியோர்கள் ஆகியோருக்கு புரத சத்து மிக்க, சத்தான, சூடான, மதிய உணவு வருடத்தில் 365 நாட்களும் வழங்கப்படுகின்றன.  தற்பொழுது தமிழகம் முழுவதிலும் உள்ள 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு தினந்தோறும் 31 லட்சம் பயனாளிகள் வருகை புரிகின்றனர்.  இந்தியாவிலே தமிழகத்தில் மட்டும் தான், ஓய்வூதியம் பெறும் முதியோருக்கு  சமைக்கப்பட்ட சூடான, மதிய உணவு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகின்றன.இந்த அங்கன்வாடி மையங்களில் புகையில்லா சூழ்நிலையை உருவாக்கும் வகையிலும், சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், முதற்கட்டமாக 16,645 மையங்களில் உள்ள சமையலறைகளில் மாசற்ற சுற்றுச் சூழலுடன் கூடிய ‘புகையில்லா சமையலறை’ ஒன்று அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டார். இதன்படி, எரிவாயு அடுப்பு, எரிவாயு இணைப்பு மற்றும் அழுத்தக்கலன் (பிரஷர் குக்கர்) ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டு, 16,645 அங்கன்வாடி மையங்களில் புகையில்லா சமையலறை அமைக்கப்பட்டுள்ளன.தற்பொழுது இந்த ஆண்டு, அதாவது  2012-2013-ஆம் ஆண்டில் 3 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில், இரண்டாவது கட்டமாக 5,000 அங்கன்வாடி மையங்களில் உள்ள சமையலறைகளை நவீனமயமாக்கும் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.             மேலும் இந்த மையங்களுக்கு அதிக அளவில் குழந்தைகள் ஊட்டச் சத்து உணவை பெறுவதற்காகவும், 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிசாரா முன்பருவக் கல்வி பெறுவதற்காகவும் வருகை புரிவதை ஊக்குவிக்கும் பொருட்டு, 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இரண்டு வண்ண உடைகள் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் முன்னோடித் திட்டத்தை துவக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக, சென்னை, வேலூர், திருச்சிராப்பள்ளி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 2,01,032 குழந்தைகள் பயனடையும் வகையில் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் இந்த திட்டத்தை அமல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  திருநங்கையர்களை சமுதாய நீரோட்டத்தில் கொண்டு வரும் வகையிலும், அவர்கள் சமுதாய மற்றும் பொருளாதார ஏற்றம் பெற ஏதுவாகவும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்களின் நலனுக்காக “ஆதரவற்ற திருநங்கையர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்” என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின்படி, 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள திருநங்கையர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஓய்வூதியமாக 1000 ரூபாய் வழங்கப்படும். இதற்காக 1 கோடியே 17 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment