Monday 30 July 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து


நெல்லூர்: ‌டில்லியிலிருந்து சென்னை ‌நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 30க்கும் மேல பயணிகள் உடல் கருகி பலியாயினர். 20 க்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் நெல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீ பிடித்த ‌‌ரயில்‌ எஸ் -11 கோச்சில்  தீயில் சிக்கி இறந்தது 20 ஆண்கள், 6 பெண்கள், 3 குழந்தைகள் அடங்குவர். இதுவரை 28 உடல்கள் ரயிலில் இருந்து எடுக்கப்பட்டள்ளதாக மாவட்ட எஸ். பி., தெரிவித்துள்ளார்.

டில்லியிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டது.ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்து பின்னர் அதிகாலை 04:30 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எஸ்-11வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறி்ந்து ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ‌பலர் காயமடைந்துள்ளனர்.

நெல்லூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் சம்பவ இடத்திற்‌கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அங்கு கலெக்டர் கூறுகையில், இது வரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர் பெட்டியில் பலியாகியிருக்கக்கூடும் என்றார்.
தூங்கும் வசதி கொண்ட இந்த 2ம் வகுப்பு பெட்டியிலிருந்து காயம் அடைந்தவர்கள் நெல்லூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பெட்டியில் மொத்தம் 72 பயணிகள் இருந்தனர்.

சிகிச்சை பெறுவோர் விவரம்: காயமுற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் விவரம் வருமாறு: ரேகா, வீணா, சாம்பசிவாராவ், வர்மாசிறீஸ், வெங்கடகோடேஸ்வரராவ், வர்மா ஹூசேன்,ராகவன், சுனில்குமார், ஹர்சித், சந்தீப்அக்னிதோத்ரி, அமீர் பிரீத்சிங். ஆகியோர் நெல்லூர் ஆஸ்பத்திரியில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


பலியானவர்கள் யார்? யார்? : இந்த ரயிலில் தீ பிடித்து எரிந்துள்ளதால் இதில் பலியானவர்கள் யார் ? யார் என அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிகம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்க முடியும் என்ற தகவலை தவிர பெயர் விவரம் குறித்து இன்னும் அறியப்படவில்லை.

விபத்தில் தப்பியவர்கள் பேட்டி: விபத்தில் சிக்கிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 11 கோச் தவிர ஏனைய பெட்டிகளுடன் ரயில் சென்னைக்கு காலை 11. 35 மணியளவில் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகள் கூறுகையில்: விபத்து நடந்தபோது காலையில் மழை மற்றும் பனி காரணமாக என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஆனால் புகை மூட்டத்தை மட்டும் பார்க்க முடிந்தது. அலறல் சப்தம் கேட்டது. பலர் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்றனர்.

ஆந்திர முதல்வர் விரைகிறார்: சம்பவம் நடந்த இடத்திற்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி அவசரமாக விரைந்துள்ளார். விபத்து ஏற்பட்ட விவரம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து நேரில் விசாரித்து காயமுற்றவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கிறார். சென்னைக்கு வந்து பின்னர் நெல்லூர் கிளம்புகிறார்.
ஒரு உயிருக்கு 5 லட்சம் நிவாரணம்: விபத்தில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் முகுல்ராய் அறிவித்துள்ளார். விபத்து குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும், காயமுற்றவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தகவல் அறிந்து கொள்ள : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த விபத்து குறித்து தகவல் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. 044- 25357398 ,என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 10 மணியளவில் ஒரு ரயில் அனுப்பிவைக்க ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் விவரம் கேட்க வேண்டுமானால் கீழ் வரும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்: 0861- 2330024, 0861-2328500

No comments:

Post a Comment