Sunday, 22 July 2012

பிரணாப் முகர்ஜி25ம் தேதி13வது ஜனாதிபதியாகபதவியேற்கவுள்ளார்

புதுடில்லி:ஜனாதிபதி தேர்தலில், ஐ.மு., கூட்டணி சார்பில் போட்டியிட்ட பிரணாப் முகர்ஜி, 69 சதவீத ஓட்டுகளை பெற்று, அபார வெற்றி பெற்றார். நாட்டின் 13வது ஜனாதிபதியாக, வரும் 25ம் தேதி, அவர் பதவியேற்கவுள்ளார். இதுவரை, முழு நேர அரசியல்வாதியாக இருந்து வந்த பிரணாப், தற்போது, ஜனாதிபதி என்ற மிக உயர்ந்த பதவியை அலங்கரிக்கப் போகிறார்.
ஜனாதிபதியாக உள்ள பிரதிபாவின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், கடந்த 19ம் தேதி நடந்தது. ஆளும் ஐ.மு., கூட்டணி சார்பில், நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி,76, போட்டியிட்டார். இவருக்கு, கூட்டணி கட்சிகளைத் தவிர, தே.ஜ., கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும், ஆதரவு தெரிவித்தன.தே.ஜ., கூட்டணி சார்பில், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சங்மா போட்டியிட்டார். இவருக்கு, தே.ஜ., கூட்டணியில் உள்ள, பா.ஜ., அகாலி தளம் மற்றும் கூட்டணியில் இல்லாத, அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள், ஆதரவு அளித்தன.
:பார்லிமென்ட் வளாகத்தில், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களான பிரணாப், சங்மா முன்னிலையில், ஓட்டுப் பெட்டிகள் திறக்கப்பட்டு, ஓட்டுகள் எண்ணும் பணி, நேற்று காலை துவங்கியது. முதலில், எம்.பி.,க்கள் அளித்த ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டுப் போட்ட, 748 எம்.பி.,க்களில், 527 எம்.பி.,க் களின் ஓட்டுகள், பிரணாப்புக்கு ஆதரவாக கிடைத்தன. சங்மாவுக்கு, 206 எம்.பி.,க்களே ஓட்டளித்திருந்தனர். 15 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
முன்னிலை:மாநிலங்கள் வாரியாக எண்ணப்பட்ட ஓட்டுகளிலும், பிரணாப் முகர்ஜியே தொடர்ந்து முன்னிலை வகித்தார். பா.ஜ., ஆளும் மாநிலங்களை தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும், பிரணாப்புக்கே அதிக ஓட்டுகள் கிடைத்தன. ஆச்சர்யம் அளிக்கும் வகையில், பா.ஜ., ஆளும் கர்நாடகாவில், சங்மாவை விட, பிரணாப்புக்கே அதிக ஓட்டுகள் கிடைத்திருந்தன. கேரளா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பதிவான ஓட்டுகள் அனைத்தும், பிரணாப் புக்கே பதிவாகியிருந்தன. தமிழகத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., ஆதரவு பெற்ற சங்மாவுக்கு, 148 ஓட்டுகளும், பிரணாப்புக்கு 45 ஓட்டுகளும் கிடைத்தன. நான்கு ஓட்டுகள் செல்லாதவை என, அறிவிக்கப்பட்டது.
அனைத்து ஓட்டுகளும், நேற்று மாலை எண்ணி முடிக்கப்பட்டன. இதில், செல்லுபடியான, 10 லட்சத்து 29 ஆயிரத்து 750 ஓட்டுகளில், ஏழு லட்சத்து 13 ஆயிரத்து 763
ஓட்டுகளை பெற்று (69.3 சதவீதம்), பிரணாப் முகர்ஜி அபார வெற்றி பெற்றார்.
சங்மாவுக்கு, மூன்று லட்சத்து 15 ஆயிரத்து 978ஓட்டுகள் கிடைத்ததாக,
தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி தெரிவித்தார்.
பதவியேற்பு:நாட்டின் 13வது ஜனாதிபதியாக, வரும் 25ம் தேதி, பிரணாப்
பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள், ஜனாதிபதி மாளிகையில், நேற்றே
துவங்கி விட்டன.
  மம்தாவும், பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளார்.பிரணாப்முகர்ஜி வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, ராகுல், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் மற்றும் அந்தோணி, சிதம்பரம் உள்ளிட்ட மூத்த மத்திய அமைச்சர்கள், பிரணாப் வீட்டுக்கு வந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிரணாப்பை எதிர்த்து போட்டியிட்ட சங்மாவும் வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ., சார்பிலும், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தனக்கு ஓட்டளித்த அனைவருக்கும், ஒத்துழைப்பு அளித்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பிரணாப் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
:ஜனாதிபதி தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள பிரணாப் முகர்ஜி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிர அரசியலில் உள்ளார். உள்துறை, ராணுவம், நிதி என்று, மத்திய அரசில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், கட்சிக்கும், ஆட்சிக்கும் நெருக்கடியான சூழல் ஏற்பட்ட போது, தன் பழுத்த அனுபவத்தையும், திறமையையும் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் ஆபத்பாந்தவனாக, கடந்த 3 ஆண்டுகளில் திகழ்ந்தார்.இத்தனை ஆண்டுகளாக, முழு நேர அரசியல்வாதியாக இருந்த பிரணாப், முதல் முறையாக, அரசியல் பரபரப்புகளில் இருந்து விலகி, நாட்டின் முதல் குடிமகன் என்ற உயர்ந்த பதவியை வகிக்கவுள்ளார்.
:
பிரணாப் முகர்ஜி நேற்று அளித்த பேட்டியில், எனக்கு, மிக உயர்ந்த பதவி கிடைப்பதற்கு காரணமாக இருந்த நாட்டு மக்களுக்கு, என் இதயப்பூர்வமான நன்றி. மக்கள் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், பணியைச் செய்வேன். அரசமைப்பு சட்டத்தை பின்பற்றி நடப்பேன். நாட்டுக்கு நான் ஆற்றிய பணிகளை விட, நாட்டு மக்கள், எனக்கு மிக அதிகமான பொறுப்புகளை தந்துள்ளனர் என,  கூறினார்.

No comments:

Post a Comment