Friday, 27 July 2012

சென்னை, ஜூலை.28 - தொழிற்கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் உறுப்பினராக உள்ள 22 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் விதத்தில், அவர்கள் வழங்கும் பசுந்தேயிலையின் சந்தை விலையின் அடிப்படையில் கிலோ ஒன்றுக்கு இரண்டு ரூபாய் கூடுதலாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளிலுள்ள பழமையான இயந்திரங்களை மாற்றி உற்பத்தித்திறனை அதிகரிக்கும்  வகையில் மானியம் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும்  இன்றியமையாத தொழிலாக விளங்கும் தேயிலைத் தொழில் தழைப்பதற்கும், தேயிலைத் தொழிலாளர்களின் நிலையை உயர்த்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.  
2001​ஆம் ஆண்டு  பச்சைத் தேயிலையின் விலை கடும் விழ்ச்சி அடைந்திருந்தபோது, அதனை சீரமைக்கும் வகையில்,  அரசு நிறுவன மூலம் `தயாரிக்கப்பட்ட  டீயை ஏல மையங்களில் மாதந்தோறும் 200 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்து, அதனை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவு நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டதையடுத்து,  இந்த டீ,  ஊட்டி டீ என்ற பெயரில் 28.8.2001 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோன்று,  உலகிலேயே முதல் முறையாக சிறு தேயிலை  விவசாயிகள் பயன் பெறும் வண்ணம் டீ சர்வ என்ற தேயிலைக்கான மின்னணு ஏல மையம் ஒன்று   தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் 13.9.2003 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் 2005​ஆம் ஆண்டு தேயிலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியிலிருந்து சிறு தேயிலை தொழிலாளர்களை பாதுகாக்க சிறு தேயிலை விவசாயிகள் பாதுகாப்புத் திட்டம் என்று ஒரு திட்டத்தினையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார்.
அந்த வகையில், மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற 15 தொழிற் கூட்டுறவு  தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ள 22,000 சிறு தேயிலை விவசாயிகளுக்கு பசுந்தேயிலைக்காக  கிலோ ஒன்றுக்கு சராசரியாக வழங்கப்பட்டு வந்த 6 ரூபாய் என்ற விலையை  தனியார் நிறுவனங்களில் பசுந்தேயிலைக்கு வழங்குவதுபோல்  8 ரூபாய் என உயர்த்தி வழங்க   தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்தத் திட்டம் 2012 ​ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிய செயல்படுத்தப்பட்டது. கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பழமையான இயந்திரங்கள் உள்ள காரணத்தால், அவை சிறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்கும் கட்டுப்படியான விலை சந்தை விலையை விட குறைவாக உள்ளது. எனவே கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேயிலை வழங்கும் சிறு தேயிலை விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால், அவர்களுக்கு சந்தை விலையை அனுசரித்து விலை வழங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில்  தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினராக உள்ள சிறு தேயிலை விவசாயிகளுக்கு பசுந்தேயிலையின் சந்தை விலையின் அடிப்படையில் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வரை கூடுதலாக  ஜுலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வழங்குவதற்கு, 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும்,  நீலகிரி மாவட்டத்திலுள்ள 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், 12 தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் அளவு குறைவாக உள்ள  காரணத்தால் பழமையான இயந்திரங்களை மாற்றி, அவைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும்  மற்றும் தேயிலையின் தரத்தினை மேம்படுத்தவும் மூலதன செலவாக 5 கோடியே 46 லட்சம் ரூபாய் மானியமாக வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  மேலும் இண்ட்கோ சர்வ தனது சொந்த நிதியிலிருந்து பழுதடைந்த கட்டடங்களை 54 லட்சம் ரூபாய் செலவில் பழுதுபார்ப்பதற்கும் அனுமதி அளித்தும் ஆணையிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment