Saturday, 7 July 2012

இந்தியாவின் எப்பகுதியிலும் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்க கூடாது : ஜெயலலிதா

இலங்கைவ் விமானப்படை வீரர்களுக்கு இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்க கூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
தாம்பர விமானநிலையத்தில் பயிற்சி பெற வந்த இலங்கை விமானப்படை வீரர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்த போதும், அவர்கள் விமானம் மூலம் பெங்களூரின் எலகங்கா விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்களுக்கு பயிற்சி தொடரவிருப்பதாகவும் தகவல் முரண்பட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது குறித்து தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள ஜெயலலிதா மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று, சிங்களர்களுக்கு சமமான உரிமைகளை பெறும் வரை, பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது வாய் மூடி மவுனியாக உள்ள மத்திய அரசு தமிழக மக்களை அவமானப்படுத்தும் விதமாக, இலங்கை நாட்டின் ஒன்பது விமானப்படை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்தில் ஒன்பது மாத காலம் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கு எனது கடும் கண்டனத்தை 5.7.2012 அன்று தெரிவித்து இருந்தேன்.

தமிழர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல் இது போன்ற தமிழர்களுக்கு எதிரான செயலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்றும் நான் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே கருத்தைத் தெரிவித்து இருந்தன.

தமிழர்களுக்காகவே பாடுபடுவதாக சொல்லிக்கொள்ளும் ஒரு தலைவர் ''அந்தச்செய்தி உண்மையாக இருக்குமானால் அப்படி பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது. பயிற்சிக்கு வந்தவர்களை உடனடியாக மத்திய அரசு திருப்பி அனுப்புவதே சரியாக இருக்கும்'', என்று இது குறித்து பட்டும் படாமலும், வெறும் வாய் வார்த்தையாக பதில் அளித்து இருக்கிறார்.

எனினும், இலங்கை நாட்டின் விமானப்படை வீரர்களுக்கு தாம்பரம் விமானப்படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு, இலங்கையின் ஒன்பது விமானப்படை வீரர்களையும் பெங்களூரூவிலுள்ள எலகங்கா விமானப்படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்காக 6.7.2012 அ‌ன்று விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம், தமிழர்களுக்கு, தமிழ் இனத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு சாதகமாக தி.மு.க அங்கம் வகிக்கும் மத்திய அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக, போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் போர்க்குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகள் சபை மூலம் தீர்மானிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம் ஆகும். இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதைத் தவிர்த்து விட்டு, பெங்களூரில் பயிற்சி அளிப்பதை தமிழர் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இலங்கை விமானப்படை வீரர்களுக்கு, இந்தியாவின் எந்த ஒரு இடத்திலும் தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும், ஒன்பது இலங்கை விமானப்படை வீரர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஆவன செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று கூறினார்.

No comments:

Post a Comment