Monday, 23 July 2012

23 ராமேஸ்வரம் மீனவர்களையும் விடுவிக்கவும்ஜெயலலிதா,

சென்னை, ஜூலை 23 : ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து 15 நாள் சிறைத் தண்டனை விதித்துள்ளது குறித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரியும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.அவர் இன்று பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த 21ம் தேதியன்று ராமேஸ்வரத்தில் இருந்து 5 இயந்திரப் படகுகளில் கட்சத் தீவுப் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர். தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களுக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு உரிமை வாய்ந்த கச்சத் தீவில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு, இலங்கை கடற்படையினர் இவ்வாறு தொடர்ந்து அச்சுறுத்தல் அளித்து வருகின்றனர். அதிலும், மீன்பிடி தடைக் காலம் முடிந்த பிறகு இது அதிகரித்துள்ளது என்று ஏற்கெனவே உங்களுக்குக்  குறிப்பிட்டுள்ளேன்.இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையால், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களது மனதில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களது அடிப்படை வாழ்வாதாரமான மீன் பிடி தொழிலே கேள்விக்குறியாகியுள்ளது.இது குறித்து இருநாட்டு அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடக்கும் போது மட்டும் இலங்கை கடற்படையினர் சில காலம் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் இதுபோன்ற அராஜகப் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.எனவே, இந்த நடவடிக்கையில் உடனடியாக தலையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள 23 ராமேஸ்வரம் மீனவர்களையும் விடுவிக்கவும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த பிரச்னை மீது உடனடியான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment