Thursday 24 January 2013

விஸ்வரூபம்பொங்கி எழுந்த இஸ்லாமியர்கள்,

ஒரு படத்தின் திரைக்கதையில் திடுக்கிடும் திருப்பங்கள் வரலாம்.
ஆனால் அந்த படத்தின் வெளியீட்டு விஷயத்திலேயே திடுக்கிடும் திருப்பங்கள் வந்தால் என்னதான் செய்வார் கமல்? விஸ்வரூபம் படத்தை துவங்கிய நாளில் இருந்து ரிலீஸ் செய்யும் நாள் வரைக்கும் அவர் சந்தித்த பிரச்சனைகள் அத்தனையும் சத்திய சோதனையையும் மிஞ்சுகிற அளவுக்கு இருக்கிறது.

ஒவ்வொரு முறை கமல் படம் ஆரம்பிக்கும்போதும் அப்படத்தின் கதையை யூகித்து தனியாக ஒரு கதையை கட்ட ஆரம்பிப்பார்கள் சிலர். மருதநாயகம், விருமாண்டி, ஹேராம் என்று இவர்கள் சொன்ன கதையை தனியாக எடுத்தால் அது பல வெள்ளிவிழாக்களை கண்டிருக்கும். இந்த முறையும் அப்படிதான் ஆரம்பித்தது இந்த நாடகம். ஒவ்வொரு முறையும் அவற்றையெல்லாம் முறியடித்து வெளியே வரும் கமல், இந்த முறை கால் வைத்தது கண்ணி வெடியில் என்றுதான் எண்ண தோன்றுகிறது.

தனக்கு தமிழ்சினிமாவிலும் மற்ற மொழிகளிலும் என்ன வியாபாரம் இருக்கிறது என்பதை நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கும் கமல், 100 கோடியில் படம் எடுக்க வந்ததே முதல் தவறு. முதலில் இந்த படத்தை தயாரிக்க முன் வந்த பிவிபி நிறுவனத்தினர், பிறகு நைசாக கழன்று கொள்ள, வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டிய நிலைமை வந்தது கமலுக்கு. தன் பணத்தை முதலீடு செய்து மீதி படத்தை எடுத்து முடித்தார் அவர். இப்போது விஸ்வரூபத்தில் போடப்பட்ட இருவர் பணத்தையும் சேதாரமில்லாமல் எடுக்க வேண்டும். அதற்காக, டிடிஎச் என்ற புதிய வழியை திறக்க முயன்ற போதுதான் இதுவரை வராதளவுக்கு வந்து சேர்ந்தது பிரச்சனை. படத்தை வெளியிட விட மாட்டோம் என்று தியேட்டர் அதிபர்கள் சங்கமும் விநியோகஸ்தர்கள் சங்கமும் ஒன்று சேர, விஸ்வரூபம் வெளியீட்டை பல முறை தள்ளி வைக்க நேர்ந்தது. இந்த நேரத்தில் முஸ்லீம் அமைப்புகளும் இது எங்கள் இனத்தை காயப்படுத்துகிற படம் என்ற குற்றச்சாட்டுடன் போராட்டத்தில் இறங்கியது.


ஒவ்வொன்றாக சமாளித்து மறுபடியும் ஒரு ரிலீஸ் தேதியை அறிவித்து தைரியமாக இப்படத்தின் பிரிமியர் ஷோவுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு சென்றிருந்த கமலுக்கு, பொழுது அவ்வளவு நல்லதாக விடியவில்லை. பிடிவாதமாக நின்ற முஸ்லீம் அமைப்புகளுக்கு படத்தை திரையிட்டு காண்பித்துவிட்டார். பொங்கி எழுந்த இஸ்லாமியர்கள், ஆங்காங்கே வசனங்களை நீக்கவோ, காட்சிகளை நீக்கவோ கூட வற்புறுத்தவில்லை. படத்தையே தடை செய் என்ற தமிழக அரசின் கதவை தட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

25 ந் தேதி படம் வெளியாகிற சமயத்தில் 23 ந் தேதி மாலை தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு உத்தரவை அனுப்பியது. விஸ்வரூபம் படத்தை வெளியிட பதினைந்து நாள் இடைக்கால தடை என்பதுதான் அந்த செய்தி. கலெக்டர்கள் மூலமாக விஸ்வரூபம் திரையிடப்படவிருந்த தியேட்டர்களுக்கும் செய்தி போனது. அதற்கு முன்பாகவே மீடியா, இந்த செய்தியை கொளுத்திப்போட நாடெங்கிலும் வரலாறு காணாத பரபரப்பு.

அரசு தரப்பிலிருந்து யாருமே திரைப்படத்தை பார்க்காத பட்சத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று காரணம் சொல்லி ஒரு படத்திற்கு தடை விதிப்பது அரசுக்கு அழகா என்று கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதுதானே அரசின் கடமை? மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துகிற வேலையை அரசு செய்யலாமா என்பதுதான் பலரது கேள்வி.

விஸ்வரூபத்திற்கு பிரச்சனை வரும் என்பதை முன்பே அறிந்து வைத்திருந்த கமல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சில வாரங்களுக்கு முன்பு சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று கமல் காரணம் சொன்னாலும், தன் படம் தொடர்பாகதான் முதல்வரை சந்தித்தார் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள் கோடம்பாக்கத்தில்.

டிடிஎச் விவகாரத்தில் வளைந்து கொடுக்காமலிருந்த கமல், படம் ஓடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என தலைமை செயலாளரிடம் மனு கொடுத்தபோது, ஒரு சினிமாவுக்காக தமிழக காவல் துறையை பயன்படுத்த முடியாது என்று கை விரிக்கப்பட்டதாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. வேறு வழியில்லாமல்தான் தியேட்டர்காரர்களிடம் அடிபணிந்தார் கமல் என்றும் கூறப்பட்டது.

ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்திவிட்ட இந்த நேரத்தில்தான் இப்படியொரு சிக்கல். முதல்வரை சந்தித்துவிட்டு திரும்பிய கமல் அடுத்த சில வாரங்களுக்குள்ளேயே முன்னாள் முதல்வர் கருணாநிதியும், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கலந்து கொண்ட ஒரு விழாவில் கலந்து கொண்டார். சிக்கலான ஒரு படத்தை கையில் வைத்துக் கொண்டு ஏன் தேவையில்லாத கூட்டங்களுக்கு அவர் போக வேண்டும் என்று அப்போதே யூகித்தார்கள் திரையுலகத்தினர் சிலர். அதன் பலனைதான் இப்போது கமல் அனுபவிக்கிறார் என்றும் கூறுகிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத சில சினிமாவுலக முக்கியஸ்தர்கள்.

அமெரிக்காவிருக்கும் கமல் அங்கிருந்து ஏதேனும் அறிக்கை அனுப்பலாம். அல்லது நேரடியாக சென்னைக்கு வந்திறங்கலாம். கமல் தரப்பிலிருந்து சொல்லப்படும் பதில் ஒன்றுதான் இன்றைய தேதிக்கு அதிமுக்கியமான வார்த்தைகளாக இருக்கும்.

No comments:

Post a Comment