Tuesday 22 January 2013

'எமது பயணம் இன்னமும் முடியவில்லை' : பதவியேற்பில் ஒபாமா


பாரக் ஒபாமா நேற்று வாஷிங்டனில் பொதுமக்கள் முன்னிலையில்  இரண்டாவது முறையாக  அமெரிக்க அதிபராக உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார்.
சுமார் 600, 000க்கு மேற்பட்ட பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு அவரது உரையை கேட்டனர். அவர்கள் முன்னிலையில் பேசிய ஒபாமா, உலக பிரச்சினைகளில் கவனம் செலுத்துவுவதை விடுத்து, உள்நாட்டின் அரசியல், வர்த்தக, சமூக விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என மறைமுகமாக தெரிவித்தார்.

எனினும் ஏனைய நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு பிரச்சினைகளை களைய முற்பட வேண்டும் எனவும்,  அமெரிக்கா இதுவரை சந்தித்த அச்சுறுத்தல்களுக்காக அல்ல. சந்தேகங்கள், பயங்கள் என்பவற்றை நிரந்தரமாக அகற்றுவதற்கு இம்முறையே உதவும் என்றார்.

எமது பயணம் இன்னமும் முடியவில்லை. அமெரிக்காவில் இதுநாள் வரை பல்வேறு நெருக்கடி நிலைகள் தோன்றி எம்மை சீண்டிப்பார்த்தன. எமக்கிருந்த தீர்வுகளை திருடிக்கொண்டன. எனினும்  இப்போது அமெரிக்காவின் எதிர்காலம் எல்லைகளற்று விரிந்துள்ளது. தசாப்தகாலமாக தொடர்ந்த அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துள்ளது. வர்த்தக ரீதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை சரியாக தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.  அமெரிக்காவில் குடியேறுபவர்கள், இந்நாடு வாய்ப்புக்களை வழங்கும் நாடு என உணர வேண்டும். இளம் மாணவர்கள், பொறியியலாளர்கள்  வெளிநாடுகளுக்கு செல்லாது எமது நாட்டிலேயே பணிபுரிய வேண்டும். அமெரிக்காவின் கடன் மற்றும் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மக்கள் ஒரு கடுமையான தெரிவுகளை பின்பற்ற வேண்டும்.
எமது பிள்ளைகள், பாதுகாப்பாக தெருக்களில் நடந்து செல்ல கூடிய நிலை தோண்ற வேண்டும். உயிர் அச்சுறுத்தல்களிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.

அவர் பதவியேற்கும் போது, அமெரிக்க முன்னாள் மாபெரும் அரசியல் தலைவர்களான மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும்  ஆபிரஹாம் லின்கன் ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட அதே பைபிளைத்தொட்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அதே போன்று, துணை அதிபராக ஜோ பிடேனும் பதவியேற்றுக்கொண்டார்.

முன்னதாக நேற்று வெள்ளை மாளிகையிலும் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.  ஒபாமா முதன்முறையாக 2008 இல் அதிபராக பதவியேற்ற போது 1.8 மில்லியன் மக்கள், வெள்ளை மாளிகை முன்னிலையில் திரண்டிருந்தனர். எனினும் இம்முறை 700,000 மக்கள் மாத்திரமே திரண்டிருந்தனர். 

No comments:

Post a Comment