Tuesday 15 January 2013

தங்கத்தில் முதலீடு செய்வது குறையும் என்றும் தகவல்


நடப்பாண்டில் பங்கு சந்தை ஏறுமுகத்துடன் எழுச்சியில் உள்ளது என்றும், இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது குறையும் என்றும் தகவல் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2008 ஆம்  ஆண்டு முதல் சர்வதேச நாடுகள்,  நிதி நெருக்கடி, பொருளாதார மந்த நிலை என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இதன் தாக்கத்தால் இந்திய பங்கு சந்தை தொடர்ந்து சரிவையே சந்தித்து வந்தது. குறிப்பாக 2011 ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் பங்குசந்தையில் முதலீடு குறைந்து காணப்பட்டது.

எனவே  அந்த காலக் கட்டங்களில் தங்கத்தின்  மீது மக்களின் முதலீடு அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டே போனது. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் அதிக லாபத்தையும் பெற்று  வந்தனர்.

இந்த நிலை, கடந்த ஆண்டு முதல் மாறத் தொடங்கியுள்ளது என்று பொருளாதார நிபுணர் ராமசுப்பு கூறுகிறார். பொருளாதார மந்த நிலையில் இருந்து சர்வதேச நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதுதான் இதற்கு காரணம் என அவர் சொல்கிறார்.

சர்வதேச நாடுகள் பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. இந்தியாவும் பொருளாதார சரிவில் இருந்து மீளத் துவங்கியுள்ளது. இதனிடையே மத்திய அரசும் பல நிதி சீர்திருத்தங்களை செய்துள்ளது. இந்த நடவடிக்கை அந்நிய முதலீட்டார்களை நம்பிக்கை படுத்தியுள்ளது.

இதன் விளைவாக அந்நிய நிதி நிறுவனங்கள்,  தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக, பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு பங்கு சந்தையில் அதிகரித்துள்ளது. இதனால்தான் வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் குறையும், அதோடு ஏற்ற இறக்கங்களுடனும் காணப்படும்.

பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு,  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக இருக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை உயர வாய்ப்பில்லை என்று சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவிப்பதாகவும் பங்கு சந்தை நிபுணர் ராமசுப்பு தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment