Tuesday, 22 January 2013

'எமது பயணம் இன்னமும் முடியவில்லை' : பதவியேற்பில் ஒபாமா


பாரக் ஒபாமா நேற்று வாஷிங்டனில் பொதுமக்கள் முன்னிலையில்  இரண்டாவது முறையாக  அமெரிக்க அதிபராக உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார்.
சுமார் 600, 000க்கு மேற்பட்ட பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு அவரது உரையை கேட்டனர். அவர்கள் முன்னிலையில் பேசிய ஒபாமா, உலக பிரச்சினைகளில் கவனம் செலுத்துவுவதை விடுத்து, உள்நாட்டின் அரசியல், வர்த்தக, சமூக விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என மறைமுகமாக தெரிவித்தார்.

எனினும் ஏனைய நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு பிரச்சினைகளை களைய முற்பட வேண்டும் எனவும்,  அமெரிக்கா இதுவரை சந்தித்த அச்சுறுத்தல்களுக்காக அல்ல. சந்தேகங்கள், பயங்கள் என்பவற்றை நிரந்தரமாக அகற்றுவதற்கு இம்முறையே உதவும் என்றார்.

எமது பயணம் இன்னமும் முடியவில்லை. அமெரிக்காவில் இதுநாள் வரை பல்வேறு நெருக்கடி நிலைகள் தோன்றி எம்மை சீண்டிப்பார்த்தன. எமக்கிருந்த தீர்வுகளை திருடிக்கொண்டன. எனினும்  இப்போது அமெரிக்காவின் எதிர்காலம் எல்லைகளற்று விரிந்துள்ளது. தசாப்தகாலமாக தொடர்ந்த அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துள்ளது. வர்த்தக ரீதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை சரியாக தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.  அமெரிக்காவில் குடியேறுபவர்கள், இந்நாடு வாய்ப்புக்களை வழங்கும் நாடு என உணர வேண்டும். இளம் மாணவர்கள், பொறியியலாளர்கள்  வெளிநாடுகளுக்கு செல்லாது எமது நாட்டிலேயே பணிபுரிய வேண்டும். அமெரிக்காவின் கடன் மற்றும் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மக்கள் ஒரு கடுமையான தெரிவுகளை பின்பற்ற வேண்டும்.
எமது பிள்ளைகள், பாதுகாப்பாக தெருக்களில் நடந்து செல்ல கூடிய நிலை தோண்ற வேண்டும். உயிர் அச்சுறுத்தல்களிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.

அவர் பதவியேற்கும் போது, அமெரிக்க முன்னாள் மாபெரும் அரசியல் தலைவர்களான மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும்  ஆபிரஹாம் லின்கன் ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட அதே பைபிளைத்தொட்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அதே போன்று, துணை அதிபராக ஜோ பிடேனும் பதவியேற்றுக்கொண்டார்.

முன்னதாக நேற்று வெள்ளை மாளிகையிலும் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.  ஒபாமா முதன்முறையாக 2008 இல் அதிபராக பதவியேற்ற போது 1.8 மில்லியன் மக்கள், வெள்ளை மாளிகை முன்னிலையில் திரண்டிருந்தனர். எனினும் இம்முறை 700,000 மக்கள் மாத்திரமே திரண்டிருந்தனர். 

Tuesday, 15 January 2013

தங்கத்தில் முதலீடு செய்வது குறையும் என்றும் தகவல்


நடப்பாண்டில் பங்கு சந்தை ஏறுமுகத்துடன் எழுச்சியில் உள்ளது என்றும், இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது குறையும் என்றும் தகவல் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2008 ஆம்  ஆண்டு முதல் சர்வதேச நாடுகள்,  நிதி நெருக்கடி, பொருளாதார மந்த நிலை என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இதன் தாக்கத்தால் இந்திய பங்கு சந்தை தொடர்ந்து சரிவையே சந்தித்து வந்தது. குறிப்பாக 2011 ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் பங்குசந்தையில் முதலீடு குறைந்து காணப்பட்டது.

எனவே  அந்த காலக் கட்டங்களில் தங்கத்தின்  மீது மக்களின் முதலீடு அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டே போனது. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் அதிக லாபத்தையும் பெற்று  வந்தனர்.

இந்த நிலை, கடந்த ஆண்டு முதல் மாறத் தொடங்கியுள்ளது என்று பொருளாதார நிபுணர் ராமசுப்பு கூறுகிறார். பொருளாதார மந்த நிலையில் இருந்து சர்வதேச நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதுதான் இதற்கு காரணம் என அவர் சொல்கிறார்.

சர்வதேச நாடுகள் பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. இந்தியாவும் பொருளாதார சரிவில் இருந்து மீளத் துவங்கியுள்ளது. இதனிடையே மத்திய அரசும் பல நிதி சீர்திருத்தங்களை செய்துள்ளது. இந்த நடவடிக்கை அந்நிய முதலீட்டார்களை நம்பிக்கை படுத்தியுள்ளது.

இதன் விளைவாக அந்நிய நிதி நிறுவனங்கள்,  தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக, பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு பங்கு சந்தையில் அதிகரித்துள்ளது. இதனால்தான் வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் குறையும், அதோடு ஏற்ற இறக்கங்களுடனும் காணப்படும்.

பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு,  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக இருக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை உயர வாய்ப்பில்லை என்று சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவிப்பதாகவும் பங்கு சந்தை நிபுணர் ராமசுப்பு தெரிவிக்கிறார்.

Monday, 14 January 2013

தமிழர்களின் அதி முக்கியமான, தனித்துவமான திருநாளான தைப்பொங்கல்


தமிழர்களின் அதி முக்கியமான, தனித்துவமான திருநாளான தைப்பொங்கல் இன்று (திங்கட்கிழமை) உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது.
உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் (சூரியன், மழை) மற்ற உயிர்களுக்கும் (கால் நடை) நன்றி சொல்லும் ஒரு நன்றியறிதலான விழாவாக கொண்டாடப்படும் இத்தைப்பொங்கல் விழா சமயங்கள் கடந்து பொதுவாக அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது.

அறுவடை காலத்தில் நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடும் வழக்கம் தமிழில் சங்ககாலத்திலிருந்து அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. தமது அறுவடையின் முதற்பயனை கதிரவனுக்கு படைத்து பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வது என்பதே தமிழன் பண்பாடு என்பது இவ்விழாவின் மூலம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மூன்று தினங்கள் கொண்டாடும் விழாவாக மாறியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் (நேற்று) மார்கழி கடைசி நாள் என்பதால் அந்நாளில் பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கமாகும். இதனை போகி பண்டியைகாக கொண்டாடுவார்கள். நாளை (செவ்வாய்க் கிழமை) மாட்டுப்பொங்கலும், நான்காம் நாள் காணும் பொங்கல் (உறவினர்களை சந்தித்து அன்பையும், உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொள்ளல்) நடைபெறுகிறது.

அகமதாபாத்தில் சர்வதேச காற்றாடி திருவிழாவைத் துவக்கி வைத்த நரேந்திர மோடி,


குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் சர்வதேச காற்றாடி திருவிழாவைத் துவக்கி வைத்த நரேந்திர மோடி,
காற்றாடித் திருவிழா குஜராத்தில் பல ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய விழாவாகும். இந்த விழாவில் மக்கள் பட்டங்களைப் பறக்கவிட்டு மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இப்படி காற்றாடி விடும் திருவிழாவை, சர்வதேச திருவிழாவாக கொண்டாட ஆரமிபித்து 24 ஆண்டுகள் ஓடிவிட்டனவாம். இந்த ஆண்டு 25 வது சர்வதேச காற்றாடித் திருவிழா கொண்டாட்டப் பட்டு வருகிறது. இந்த காற்றாடித் திருவிழா, ஒரு வாரம் வரை நடக்கும் என்றும் தெரிகிறது.

25 வது சர்வதேச காற்றாடித் திருவிழாவை குஜராத்தில் உள்ள  அகமதாபாத்தில் சபர்மதி நதிக்கரையில் நேற்று துவக்கி  வைத்துப் பேசினார் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி. அப்போது, குஜராத்தில் பல ஆண்டுகளாக இந்த காற்றாடி திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இதை ஒரு சம்பிரதாய விழாவாக மட்டுமே  நடத்தி வந்தார்கள்.

இந்த திருவிழாவுக்கு சர்வதேச அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது நான்தான். அதாவது இந்த காற்றாடி விடும் திருவிழாவை பிரபலப் படுத்தி உலகெங்கும் உள்ள சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து உள்ளேன். காற்றாடியைக்  காட்டி உலகையே ஈர்க்க முடியும் என்பதை நிரூபித்துள்ளேன்.

இந்த ஆண்டு காற்றாடித் திருவிழாவை சிறு நகரங்களிலும் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் குஜராத்தில் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும். இதனால் குஜராத் சுற்றுலாத்துறை சராசரியான 7 சதவிகிதத்தை விட, 16 சதவிகித வளர்ச்சியை குஜராத் சுற்றுலாத்துறை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. குஜராத்தில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் குஜராத் முழுவதும் இருக்கும் பரம ஏழைகள் கூட பலன் அடைவார்கள் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்


முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியீட்ட பொங்கல் வாழ்த்துச் செய்தியில் :

உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜாதி வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்தோடு பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதமாக கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளைபொருள்களை வைத்து புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கலோ பொங்கல் என்று இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை பொங்கல் ஆகும்.

வள்ளுவர் குறளுக்கு ஏற்ப உலகில் மக்கள் பல தொழில்கள் செய்து வந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது. இல்லங்கள்தோறும் பொங்கட்டும் பொங்கல்! இதயங்கள்தோறும் தங்கட்டும் இன்பங்கள்!' என மனமார வாழ்த்துவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Friday, 16 November 2012

9ம் வகுப்புப் பாடத்தில் நாடார்கள் பற்றிய தவறான கருத்து : உடனே நீக்கக்கோரி பிரதமருக்கு கடிதம்


நாடார்கள் குறித்து அவதூறாக சிபிஎஸ்இ-9ம் வகுப்புப் பாடத்தில் கூறப்பட்டுள்ளதை உடனே நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், தமிழகத்தின் ஒரு பிரிவினரான நாடார்களை இழிவு படுத்தும் விதத்தில் பாடம் இடம்பெற்றிருப்பதை உங்கள் கவனத்துக் கொண்டு வருகிறேன். இந்தப் பாடத்தில், சாதிய ரீதியில் இவை அணுகப் பட்டிருக்கின்றன. சாதிப் பிரச்னையும் உடுப்பு மாற்றமும் என்ற பாடத்தில், தென்னகத்தில் நடத்திய தோள் சீலைப் போராட்டம் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுத் தொடர்புடைய ஒரு பகுதி மக்களை இவ்வாறு சித்திரிப்பது நவீன சமுதாயத்துக்கு உகந்ததல்ல. எனவே, இந்தப் பாடத்தை புத்தகத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் முதல்வர் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நெல்லை அருகே பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதிக் கொண்ட விபத்தில் சாத்தூரை சேர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் பலியானார்கள்

நெல்லை,நவ.17 - நெல்லை அருகே பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதிக் கொண்ட விபத்தில் சாத்தூரை சேர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்த சிவா (29), தங்கசாமி (17), மாரிசாமி (19), சங்கரநாராயணன் (22), சக்திகணபதி (23), மணிகண்டன் (29), மருதுபாண்டி (24), காளிராஜ் (26), சபரி (21), ராஜ்குமார் (28) ஆகியோர் சாத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் அனைவரும் கேளர மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேனில் சுற்றுலா சென்றனர். வேனை அதே ஊரைச் சேர்ந்த சந்திரகருப்பசாமி (45) என்பவர் ஓட்டி வந்தார். இவர்கள் கேரளாவில் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு நேற்று முன்தினம் குமரி மாவட்டத்திற்கு வந்தனர். அங்கு திற்பரப்பு, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்தனர். பின்பு நள்ளிரவு அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டு வந்தனர். இவர்களது வேன் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் நெல்லையை அடுத்துள்ள கங்கைகொண்டான் ராஜாபுதுக்குடியிருப்பு பகுதியில் வந்தபோது திடீரென பழுதானது. இதனைத்தொடர்ந்து வேனை டிரைவர் ரோட்டில் ஓரமாக நிறுத்தி பழுதானதை சரிசெய்து கொண்டிருந்தார். அதிகாலை நேரம் என்பதால் வேனில் வந்தவர்கள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நாமக்கல்லில் இருந்து நெல்லைக்கு முட்டை ஏற்றி வந்த லாரி நெல்லையில் முட்டைகளை இறக்கிவிட்டு மீண்டும் நாமக்கல் நோக்கி சென்ற போது முன்னால் பழுதாகி நின்ற வேன்  மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் ரோட்டோரம் இருந்த பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் சிவா, சபரி, ராஜ்குமார் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்கள். மேலும் வேன் டிரைவர் சந்திரகருப்பசாமி, காளிராஜ், மருதபாண்டி, சக்திகணபதி, மாரிசாமி,  தங்கசாமி ஆகியோர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈ்டுபட்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.