Monday, 23 July 2012

23 ராமேஸ்வரம் மீனவர்களையும் விடுவிக்கவும்ஜெயலலிதா,

சென்னை, ஜூலை 23 : ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து 15 நாள் சிறைத் தண்டனை விதித்துள்ளது குறித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரியும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.அவர் இன்று பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த 21ம் தேதியன்று ராமேஸ்வரத்தில் இருந்து 5 இயந்திரப் படகுகளில் கட்சத் தீவுப் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர். தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களுக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு உரிமை வாய்ந்த கச்சத் தீவில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு, இலங்கை கடற்படையினர் இவ்வாறு தொடர்ந்து அச்சுறுத்தல் அளித்து வருகின்றனர். அதிலும், மீன்பிடி தடைக் காலம் முடிந்த பிறகு இது அதிகரித்துள்ளது என்று ஏற்கெனவே உங்களுக்குக்  குறிப்பிட்டுள்ளேன்.இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையால், தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களது மனதில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களது அடிப்படை வாழ்வாதாரமான மீன் பிடி தொழிலே கேள்விக்குறியாகியுள்ளது.இது குறித்து இருநாட்டு அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடக்கும் போது மட்டும் இலங்கை கடற்படையினர் சில காலம் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் இதுபோன்ற அராஜகப் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.எனவே, இந்த நடவடிக்கையில் உடனடியாக தலையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள 23 ராமேஸ்வரம் மீனவர்களையும் விடுவிக்கவும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த பிரச்னை மீது உடனடியான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Sunday, 22 July 2012

பிரணாப் முகர்ஜி25ம் தேதி13வது ஜனாதிபதியாகபதவியேற்கவுள்ளார்

புதுடில்லி:ஜனாதிபதி தேர்தலில், ஐ.மு., கூட்டணி சார்பில் போட்டியிட்ட பிரணாப் முகர்ஜி, 69 சதவீத ஓட்டுகளை பெற்று, அபார வெற்றி பெற்றார். நாட்டின் 13வது ஜனாதிபதியாக, வரும் 25ம் தேதி, அவர் பதவியேற்கவுள்ளார். இதுவரை, முழு நேர அரசியல்வாதியாக இருந்து வந்த பிரணாப், தற்போது, ஜனாதிபதி என்ற மிக உயர்ந்த பதவியை அலங்கரிக்கப் போகிறார்.
ஜனாதிபதியாக உள்ள பிரதிபாவின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், கடந்த 19ம் தேதி நடந்தது. ஆளும் ஐ.மு., கூட்டணி சார்பில், நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி,76, போட்டியிட்டார். இவருக்கு, கூட்டணி கட்சிகளைத் தவிர, தே.ஜ., கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும், ஆதரவு தெரிவித்தன.தே.ஜ., கூட்டணி சார்பில், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சங்மா போட்டியிட்டார். இவருக்கு, தே.ஜ., கூட்டணியில் உள்ள, பா.ஜ., அகாலி தளம் மற்றும் கூட்டணியில் இல்லாத, அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள், ஆதரவு அளித்தன.
:பார்லிமென்ட் வளாகத்தில், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களான பிரணாப், சங்மா முன்னிலையில், ஓட்டுப் பெட்டிகள் திறக்கப்பட்டு, ஓட்டுகள் எண்ணும் பணி, நேற்று காலை துவங்கியது. முதலில், எம்.பி.,க்கள் அளித்த ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டுப் போட்ட, 748 எம்.பி.,க்களில், 527 எம்.பி.,க் களின் ஓட்டுகள், பிரணாப்புக்கு ஆதரவாக கிடைத்தன. சங்மாவுக்கு, 206 எம்.பி.,க்களே ஓட்டளித்திருந்தனர். 15 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
முன்னிலை:மாநிலங்கள் வாரியாக எண்ணப்பட்ட ஓட்டுகளிலும், பிரணாப் முகர்ஜியே தொடர்ந்து முன்னிலை வகித்தார். பா.ஜ., ஆளும் மாநிலங்களை தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும், பிரணாப்புக்கே அதிக ஓட்டுகள் கிடைத்தன. ஆச்சர்யம் அளிக்கும் வகையில், பா.ஜ., ஆளும் கர்நாடகாவில், சங்மாவை விட, பிரணாப்புக்கே அதிக ஓட்டுகள் கிடைத்திருந்தன. கேரளா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பதிவான ஓட்டுகள் அனைத்தும், பிரணாப் புக்கே பதிவாகியிருந்தன. தமிழகத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., ஆதரவு பெற்ற சங்மாவுக்கு, 148 ஓட்டுகளும், பிரணாப்புக்கு 45 ஓட்டுகளும் கிடைத்தன. நான்கு ஓட்டுகள் செல்லாதவை என, அறிவிக்கப்பட்டது.
அனைத்து ஓட்டுகளும், நேற்று மாலை எண்ணி முடிக்கப்பட்டன. இதில், செல்லுபடியான, 10 லட்சத்து 29 ஆயிரத்து 750 ஓட்டுகளில், ஏழு லட்சத்து 13 ஆயிரத்து 763
ஓட்டுகளை பெற்று (69.3 சதவீதம்), பிரணாப் முகர்ஜி அபார வெற்றி பெற்றார்.
சங்மாவுக்கு, மூன்று லட்சத்து 15 ஆயிரத்து 978ஓட்டுகள் கிடைத்ததாக,
தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி தெரிவித்தார்.
பதவியேற்பு:நாட்டின் 13வது ஜனாதிபதியாக, வரும் 25ம் தேதி, பிரணாப்
பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள், ஜனாதிபதி மாளிகையில், நேற்றே
துவங்கி விட்டன.
  மம்தாவும், பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளார்.பிரணாப்முகர்ஜி வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, ராகுல், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் மற்றும் அந்தோணி, சிதம்பரம் உள்ளிட்ட மூத்த மத்திய அமைச்சர்கள், பிரணாப் வீட்டுக்கு வந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிரணாப்பை எதிர்த்து போட்டியிட்ட சங்மாவும் வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ., சார்பிலும், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தனக்கு ஓட்டளித்த அனைவருக்கும், ஒத்துழைப்பு அளித்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பிரணாப் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
:ஜனாதிபதி தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள பிரணாப் முகர்ஜி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிர அரசியலில் உள்ளார். உள்துறை, ராணுவம், நிதி என்று, மத்திய அரசில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், கட்சிக்கும், ஆட்சிக்கும் நெருக்கடியான சூழல் ஏற்பட்ட போது, தன் பழுத்த அனுபவத்தையும், திறமையையும் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் ஆபத்பாந்தவனாக, கடந்த 3 ஆண்டுகளில் திகழ்ந்தார்.இத்தனை ஆண்டுகளாக, முழு நேர அரசியல்வாதியாக இருந்த பிரணாப், முதல் முறையாக, அரசியல் பரபரப்புகளில் இருந்து விலகி, நாட்டின் முதல் குடிமகன் என்ற உயர்ந்த பதவியை வகிக்கவுள்ளார்.
:
பிரணாப் முகர்ஜி நேற்று அளித்த பேட்டியில், எனக்கு, மிக உயர்ந்த பதவி கிடைப்பதற்கு காரணமாக இருந்த நாட்டு மக்களுக்கு, என் இதயப்பூர்வமான நன்றி. மக்கள் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், பணியைச் செய்வேன். அரசமைப்பு சட்டத்தை பின்பற்றி நடப்பேன். நாட்டுக்கு நான் ஆற்றிய பணிகளை விட, நாட்டு மக்கள், எனக்கு மிக அதிகமான பொறுப்புகளை தந்துள்ளனர் என,  கூறினார்.

Saturday, 14 July 2012


சென்னை நகரில் குடிநீர் பற்றாக்குறை கருணாநிதியின் குற்றசாட்டுக்கு தமிழக அரசு பதில்


சென்னை நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இல்லை என்றும் நாள் ஒன்றுக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் நடந்துகொண்டிருக்கிறது என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் நடந்து கொண்டிருப்பதாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பட்டிருக்கிறது. அதோடு, 1851 கோடி லிட்டர் தண்ணீர் சேமிப்பில் இருப்பதாகவும்,மேலும்  போரூர், அம்பத்தூர், அயப்பாக்கம், ஏரிகளின் சீரமைப்புப் பணி, மற்றும், திருவள்ளூரில் புதிய நீர்தேக்க ஏரிகள் அமைக்கும் பணி நடப்பதாகவும், சோழவரம் ஏரியை ஆழப் படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கர்நாடக பாஜகவில் குழப்பம் தீர்ந்தபாடில்லை

ஜகதீஷ் ஷட்டர் நேற்று புதிய முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டபின்னும்,
கர்நாடக பாஜகவில் குழப்பம் தீர்ந்தபாடில்லை. உடுப்பி மாவட்ட எம் எல் ஏ, ஸ்ரீனிவாச ஷெட்டி மூலம் மேலும் குழப்பம் நீடிப்பதாகத் தெரிகிறது.
     
ஜகதீஷ் ஷட்டர், முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டபின், ஸ்ரீனிவாச ஷெட்டிக்கு, மந்திரி பதவி கொடுப்பதாக தலைமை பாஜக அறிவித்திருந்ததாகவும், ஆனால், புதிதாக பதவி ஏற்க இருக்கும் மந்திரிகள் பட்டியலில் ஸ்ரீனிவாச ஷெட்டியின் பெயர் வாசிக்கப் படவில்லை என்று தெரிந்ததுமே, ஷெட்டி கதறி அழுதுவிட்டதாகவும் தெரிகிறது.
     
தனது தொகுதியில் நலத்திட்டங்களை நல்லபடியாக செய்து வந்ததால்தான், தான் மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டதாகவும், அப்படிப்பட்ட தனக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை, எப்படி நான் எனது தொகுதி மக்களின் முகத்தில் விழிப்பேன் எனக் கூறி, ஆளுனரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டுத்தான் திரும்ப ஊருக்கு செல்வேன் என்றும் ஸ்ரீனிவாச ஷெட்டி காத்திருப்பதாகத் தெரிகிறது.
     
இதற்கிடையில், ஸ்ரீனிவாச ஷெட்டி தொகுதி மக்கள் நேற்று முதலே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் கடை அடைப்பு போன்ற எதிர்ப்புக்கள் இன்று நடந்து வருவதாகவும் தெரிகிறது.
மேலும் இவரைப்போலவே குமாரசாமி எம் எல் ஏ போன்ற 4 எம் எல் ஏ க்கள் தங்களுக்கும் மந்திரி பதவி கொடுக்கவில்லை என்று கூறி, தங்கள் பதவியை ராஜினாமா செய்ய ஆளுனரை சந்திக்க காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Saturday, 7 July 2012

இந்தியாவின் எப்பகுதியிலும் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்க கூடாது : ஜெயலலிதா

இலங்கைவ் விமானப்படை வீரர்களுக்கு இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்க கூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
தாம்பர விமானநிலையத்தில் பயிற்சி பெற வந்த இலங்கை விமானப்படை வீரர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்த போதும், அவர்கள் விமானம் மூலம் பெங்களூரின் எலகங்கா விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்களுக்கு பயிற்சி தொடரவிருப்பதாகவும் தகவல் முரண்பட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது குறித்து தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள ஜெயலலிதா மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று, சிங்களர்களுக்கு சமமான உரிமைகளை பெறும் வரை, பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது வாய் மூடி மவுனியாக உள்ள மத்திய அரசு தமிழக மக்களை அவமானப்படுத்தும் விதமாக, இலங்கை நாட்டின் ஒன்பது விமானப்படை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்தில் ஒன்பது மாத காலம் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கு எனது கடும் கண்டனத்தை 5.7.2012 அன்று தெரிவித்து இருந்தேன்.

தமிழர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல் இது போன்ற தமிழர்களுக்கு எதிரான செயலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்றும் நான் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தேன். தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே கருத்தைத் தெரிவித்து இருந்தன.

தமிழர்களுக்காகவே பாடுபடுவதாக சொல்லிக்கொள்ளும் ஒரு தலைவர் ''அந்தச்செய்தி உண்மையாக இருக்குமானால் அப்படி பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது. பயிற்சிக்கு வந்தவர்களை உடனடியாக மத்திய அரசு திருப்பி அனுப்புவதே சரியாக இருக்கும்'', என்று இது குறித்து பட்டும் படாமலும், வெறும் வாய் வார்த்தையாக பதில் அளித்து இருக்கிறார்.

எனினும், இலங்கை நாட்டின் விமானப்படை வீரர்களுக்கு தாம்பரம் விமானப்படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு, இலங்கையின் ஒன்பது விமானப்படை வீரர்களையும் பெங்களூரூவிலுள்ள எலகங்கா விமானப்படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்காக 6.7.2012 அ‌ன்று விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம், தமிழர்களுக்கு, தமிழ் இனத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு சாதகமாக தி.மு.க அங்கம் வகிக்கும் மத்திய அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக, போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் போர்க்குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகள் சபை மூலம் தீர்மானிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம் ஆகும். இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதைத் தவிர்த்து விட்டு, பெங்களூரில் பயிற்சி அளிப்பதை தமிழர் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இலங்கை விமானப்படை வீரர்களுக்கு, இந்தியாவின் எந்த ஒரு இடத்திலும் தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும், ஒன்பது இலங்கை விமானப்படை வீரர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஆவன செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று கூறினார்.

Friday, 6 July 2012

தேசிய ஆலோசனைக் குழுக்கூட்டம் டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று கூடுகிறது


தேசிய ஆலோசனைக் குழுக்கூட்டம் டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று கூடுகிறது.
இதில் 2010ம் ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்யவுள்ளதுடன், இன்னும் பல முக்கிய முடிவுகள் குறித்தும், முக்கிய மசோதாக்கள் பற்றியும் விவாதிக்க இருப்பதாக தெரிகிறது. முக்கியமாக, பின்தங்கிய மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திட்டங்கள் வகுக்கப்படலாம் எனவும், ஏற்கனவே தேசிய ஆலோசனை குழு சமர்பித்திருக்கும் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்படலாம் எனவூம் எதிர்பார்க்கப்படுகிறது.
    
மேலும் முறைசாராத் தொழில் செய்பவர்கள், மற்றும் சாலையோரக் கடைகள் வைத்திருப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் இவர்களுக்கு ஓய்வூதியத்துடன் காப்பீட்டுத் திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்தும், மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்குவது போன்ற பலமுக்கிய விஷயங்களும் விவாதிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன