Thursday, 13 September 2012

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம்

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் யுரேனியம் நிரப்புவதற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் எரிசக்தி நிரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னர் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பூவுலக நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையிட்டனர்.

அணுச்அக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் பாதுகாப்பு பரிந்துரைகளில் 6 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதம் 9 பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்ப தடை விதிக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்க் வந்த போது மனு தாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிட்டார்.

'எனினும் யுரேனியம் நிரப்ப தடை விதிக்க முடியாது. நாங்கள் மனுதாரருக்கோ கூடங்குளம் அணு உலை நிர்வாகத்திற்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் அங்கு வாழும் ஏழை மக்களின் பாதுகாப்புக்கே முதலிடம் கொடுக்கிறோம். அவர்களது பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும். அவர்களுக்கு தங்களது வாழ்க்கை பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ள உச்சநீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 20 ம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளது.

இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை என அணு சக்தி ஒழுங்குமுறை ஆணைய தலைவர் எஸ்.எஸ். பஜாஜ் தெரிவித்துள்ளார்.

அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தை சேர்ந்த 7 பேர் கொண்ட குழு, அணு மின் நிலையத்தின் இறுதிக்கட்ட பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், தாம் ஏற்கனவே பாதுகாப்பு தொடர்பாக வழங்கிய 17 பரிந்துரைகளில் ஒரு சிலவற்றை நிறைவேற்றும் பணி கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகளால் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து பரிந்துரைகளையும் 6 மாதம் தொடக்கி 2 வருடங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற காலக்கெடுவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment